நான்கு வருடங்களுக்கு முன்பு 2015 ல் ஒரு புது செடி ஒன்று முளைத்திருந்தது. என்னால் என்ன செடி / மரம் என்று அடையாளம் கண்டுபடிக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் ஆங்கில ஆராய்ச்சியாளர் எழுதிய ஆங்கில புத்தகமான "தி கிரேட் இந்தியன் ஹெட்ஜ்" தமிழாக்கம் "உப்பு வேலி" என்ற பெயரில் வெளிவரும் தகவல் கிடைத்தது. அந்த புத்தகம் உப்பு வியாபாரத்திற்காக ஆங்கிலேய அரசு மரங்களை கொண்டு உயிர் வேலி பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் அமைத்து இந்தியர்களை எப்படி சுரண்டியது என்பதை பற்றி எழுதி இருந்தது.
நான் எனது வயல் வாங்கிய புதிது. உயிர் வேலி அமைக்க முயன்று வந்தேன். அதனால் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புத்தகம் வாங்க சென்றேன். அங்கு திரு. ராய் மாக்சிம் கூறிய தகவல்களை கேட்டு இரண்டு புத்தகங்கள் வாங்கி அதில் ஒன்றில் நமது அபிமான எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களுக்காக அவர் எழுதிய "உப்பு கணக்கு" புத்தகத்தை பற்றி கூறி திரு ராய் அவர்களின் கையெழுத்துடன் புத்தகத்தை பெற்று எழுத்தாளர் திருமதி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று அளித்துவிட்டு படித்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அவரும் அதை படித்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அவர் உஷாவாக வரைந்த அவரின் அபிமான தெய்வமான "கற்பகாம்பாளின்" ஓவியத்தை எனக்கு பரிசளித்தார். அதனை வீட்டிற்கு கொண்டு வந்து சுவரில் மாட்டினேன்.
பிறகு கற்பகாம்பாளின் தவம் பற்றி படித்தேன். அதில் அம்பாள் மயிலாக தவமிருந்தது ஒரு புன்னை மரத்தடியில் என்ற தகவல் கிடைத்தது. கபாலிஸ்வரருக்கும் புன்னை வன நாதர் என்ற பெயரும் சன்னிதியும் இருப்பது தெரிய வந்தது. இப்பொழுது எங்கள் வீட்டில் முளைத்திருந்த மரம் பற்றி அறிய முற்பட்டேன்.
என்ன ஆச்சரியம் வீட்டில் முளைத்திருப்பது புன்னை மரம் என்று தெரிய வந்தது.
இது என்ன இறைவியின் திருவிளையாடல் என்றே தோன்றுகிறது. அம்மன் எழுந்தருளல் முன் அவளின் மரத்தை இங்கு முளைக்க செய்துவிட்டாள்.
பல முனிவர்களும் தங்கள் தவம் ஒரு முகமாக இருக்க மரங்களாக அவதரிப்பதாக அகத்தியர் வாக்காக சமீபத்தில் படித்தேன்.
"மரம் செய்ய விரும்பும்" என் முயற்சிக்கு இறையின் அருளாக புன்னை மரம் எழுந்திருப்பதாக உள்ளுணர்வு உணர்த்துகிறது.
அநேக சிவன் கோவில்களில் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கிறது.
வன்னி மரக்காட்டில் தவமிருந்ததால் வான்மீகி என்ற பெயர் பெற்று இன்று அந்த ஊர் திருவான்மீகியூர் என்பது திருவான்மியூராக மருவி இருக்கிறது. புரசைமரக் காடாக இருந்து இடம் இன்று புரசைவாக்கமாக உள்ளது. அங்கு இன்று இருக்கும் சிவன் கோவிலுக்கும் தல மரம் புரசை மரமே. திருவேற்காடு, திருவாலங்காடு, மாங்காடு என்ற பெயர்களில் இருந்தே விளங்கும் அது எந்த மரம் அந்த பகுதியில் மிகுந்து இருந்ததோ அதன்படியே நமது முன்னோர்கள் அந்தந்த ஊர்களுக்கு பெயரும் அதில் ஒரு மரத்தடியில் சிவனையும் வைத்து மரத்தையே சிவனாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள்.
"தெய்வமணிமாலை"யில் அருட்பிரகாச வள்ளலாரும் கந்த கோட்டத்தில் உள்ள முருகனை பற்றி கூறிவருகையில் தரு ஓங்கு சென்னையில் தருமம் மிகும் என்று கூறுகிறார்.
மீண்டும் மயிலாப்பூர் புன்னை வனக்காடாக மாறுமா? சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து புராதன சிவாலயங்களை நாம் ஒரு வரைபடமாக மாற்றி அந்தந்த மரங்கள் இருக்கும் காடாக நினைத்து பார்த்தால் சென்னையே தருமபுரியாக மாறி தருமபரிபாலனம் செய்ய உகந்த ஊராக மாறி தமிழ் நாட்டில் தருமம் தழைத்து விடும்.
No comments:
Post a Comment