Monday, February 6, 2023

Son Sun margam சுத்த சன்மார்க்கம்

 சமரச சுத்த "சன்" மார்க சங்கம்



இன்று தை பூசம் - பௌர்ணமி - வள்ளலார் ( 5 பிப்ரவரி 2023 ) என்றும் ஜோதி இராமலிங்க சுவாமிகள் என்று போற்றப்படுகின்ற ஆன்மீகத்தின் உச்சநிலையை தொட்டவர், அதை அனைவருக்குமாக விளக்கியவர் தனது பஞ்ச பூதங்களினால ஆன பரு உடலை முழுவதுமாக ஓளியாக்கி ஜோதி வடிவில் காட்சி அளித்த நாள். 

இதனை தமிழக முதல்வர் கொண்டாடவும் அதற்காக சிறப்பு குழுக்கள் அமைத்து விழா ஏற்பாடுகள் செய்யப்படுவது அவர் " ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல " என்று சொல்வதும் நல்ல முன்னேற்றம். 

அருட்பிரகாச வள்ளலாரால் "சமரச சுத்த சன்மார்க சபை" தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் கடந்து விட்டது. அதில் "ஜீவ காருண்ய ஒழுக்கம் " என்ற அனைத்து உயிர்களையும் நேசிப்பதே அடிப்படை. 
வள்ளலாரின் பதிவுகளில் முருக வழிபாடு மற்றும் சிதம்பரம் சிவ வழிபாடுகளை பற்றி விளக்கியுள்ளார்கள். 

ஆனால் "கடவுள் மறுப்பு " "பகுத்தறிவு" என்று கொள்கைகளினால் உருவானதாக சொல்லும் திமுகவினர் "வள்ளலாரை" மட்டும் கொண்டாட வருவதேன் ?? என்ற கேள்வி பலர் மனதிலும் எழுகிறது. 

வள்ளலார் "சாதி மத பேதங்களை எதிர்த்தவர்" மற்றும் "உருவ வழிபாட்டை எதிர்த்தவர்" என்ற ரீதியில் பிராமணர்களால் இயற்றப்பட்ட காப்பாற்றப்படும் " வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தவர் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில் பல திராவிட பத்திரிகைகளில் "வள்ளலார் பிராமணர்களால் மிகவும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் வடலூரில் கதவை சாத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பலர் கட்டு-உரைகள் எழுதுகின்றனர். இந்த வாதம் வள்ளலாரை புகழ்வது போல் அவரின் கோட்பாடையே கேவலப்படுத்துவதாகும். வள்ளலார் மிகத் தெளிவாக இந்த மனித உடலை எப்படி ஒளி உடல் ஆக்க முடியும் என்று தமது செய்யுள்களில் விளக்கமாக வடித்துள்ளார். அவர் பலருக்கு நடைமுறை பயிற்சியாக ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வழிக்காட்டினார். அவர் வழிக்காட்டிய வழியில் இன்றும் பலர் பயிற்சி செய்து வருகிறார்கள். 
இந்த முறையில் ஜீவகாரூண்யத்தை அனைத்து உயிர்களிடத்திலும் காண்பிக்க அந்த முழு அன்பு பூரணமான நிலையில் அந்த பரு உடல் மூலக் கூறுகளாக பிரிக்கப்பட்டு தனது மூலமான ஓளி துகள்களாக மாறுகிறது. 

இந்த நிகழ்வை பகுத்தறிவிற்கு ஓவ்வாதது விஞ்ஞானத்திற்கு புறம்பானது என்று கூறுவோர் கவனிக்க வேண்டியது இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்று விளக்கும் விஞ்ஞானிகள் அது ஓளி வெடித்து சிதறி இந்த பிரபஞ்சத்தில் அனைத்து கோள்களும் உருவானதாக தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். ஒளியிலிருந்து வந்தது ஓளியாக முடியும் என்பது பிரபஞ்ச விதி. இது முன்பும் நடந்துள்ளது என்பது பெரிய புராணத்தில் "திரு நாளைப் போவார்" (நந்தனார் சரித்திரம் ) நாயன்மார் ஜோதி ஆனதாகவும், ஆழ்வார்களில் கோதை நாச்சியார் என்னும் ஆண்டாளும் ஜோதி ரூபமாக இறைகலந்தது குறிப்பிட பட வேண்டியது.  மாணிக்க வாசகரும் தனது "திருவெம்பாவையில்" அருட்பெருஞ் ஜோதி தத்துவத்தை விளக்கியுள்ளார்கள். 

அப்படி வள்ளலார் அந்த பூட்டிய அறையில் இறந்திருந்தால் அங்கு உடல் அழுகிய வாசனை வந்திருக்க வேண்டும். பின்னர் எலும்பு கூடு கிடைத்திருக்க வேண்டும் அல்லது சிலர் கூறுவது போல் எரிந்திருந்தால் அந்த அறையில் அந்த உடலின் சாம்பல் இருந்திருக்க வேண்டும். இதனை அன்றே ஆராய்ந்த ஆங்கிலேய அதிகாரி இராமிலிங்க சுவாமிகளின் எந்த தடயமும் அங்கு கிடைக்கவில்லை என்கிறார். ஆங்கில அதிகாரியின் பதிவுகள் இந்த இணையதளத்தில் காணக் கிடைக்கிறது https://vallalaruniversalmission.org/british-gazette/
பகவத் கீதையில் ஆன்மாவிற்கு அழிவில்லை என்று விளக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் தத்துவமோ இந்த பூத உடலே மரணம் என்பது இல்லாமல் ஓளியாக மாற முடியும் என்கிறார். இதனை அவர் "மரணமில்லா  பெருவாழ்வு" என்கிறார் வள்ளலார். 

வள்ளலார் "அருட்பெருஞ்ஜோதி" தத்துவம் நாம் ஒவ்வொருவரையும் "தனிபெருங்கருணை" யுடன் வழி நடத்தி கொண்டிருக்கிறது. 

அந்த அருட்பெருஞ்ஜோதி இன்று திமுக தலைவரையும் அவர் குடும்பத்தையும் வழி நடத்துகிறது. சட்டை கிழித்துக் கொண்டு ஸ்டாலின் எதிர் கட்சி தலைவராக சட்டசபையை விட்டு வெளியே வந்தவுடன் அவருக்கு முதல்வர் பதவி நோக்கி அருட்பெருஞ்ஜோதி நகர்த்தியது. வள்ளலாரின் அருட்பணியையும் போற்றும் வாய்ப்பையும் தந்துள்ளது. 

ஆனால் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்ற கிடைத்துள்ள வாய்ப்பை, பரம்பரை சொத்தாக கருதாமல் , நமக்கடுத்து நம்ம "சன்" அவருக்கு பின் அவரது "சன்" என்ற "சன்"மார்கமாக போகாமல்,  இரத்த சம்பந்தமாக போகாமல், தனது என்ற சின்ன வட்டத்தை தாண்டி ,
பாரதியார் கேட்டபடி "பெரிதினும் பெரிது கேள்"  என்ற வேட்கையுடன், பதவி, புகழ் , சொத்து , ஆட்சி, கட்சி என்ற வட்டங்களை தாண்டி "மரணமில்லா பெருவாழ்வு" என்ற உன்னத நிலைக்கு வள்ளலார் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி வழி நடத்த தயாராக உள்ளது.

இதை விடுத்து தங்கள் "சன்"னிற்கு சாமரம் வீசுபவர்களுடன் சமரசம் செய்து கொண்டு "சன்" மார்கமாக செயல்பட்டால் தங்களுக்கு கிடைத்துள்ள அரிதிலும் அரிதான மானுடப் பிறவியில் அரிதாக கிடைக்க கூடிய முதல்வர் பதவியை கொண்டு சன்மார்க்கத்தில் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வாய்ப்பை செய்ய தவறவிட்டால்  பின்னர் இந்த பிறவியில் கிடைப்பதற்கு வழிக்கு அருகில் சென்று முழுவதுமாக வாழமுடியவில்லையே என்று ஏங்க வேண்டி வரலாம்.


இன்றைய தமிழ்நாட்டின் நிலை எப்படி உள்ளது ?? அரசியல் செய்பவர்கள் பல இலட்சம் கோடிகள் சம்பாதிப்பதற்காக அனைத்து துறைகளிலும் பிறப்பு முதல் இறப்பு வரை ஊழலில்  அனைவரும் ஊறி நிற்கின்றோம். சாலையில் ஒவ்வொரு குண்டு குழியில் ஏறி இறங்கும் போதும் பணத்தாசை வந்து நம் முகத்தில் வந்து முட்டுகிறது. 

காலை உணவு கூட பிள்ளைக்கு ஊட்டி விட பாதி தமிழ்நாட்டு குடிமகன்கள் தெளிவாகவே இல்லை. அப்பனுக்கு டாஸ்மேக் சாராயத்தை  கொடுத்துவிட்டால் பிள்ளைக்கு காலை உணவும் அரசாங்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அரசு சோறு போடும் ஆனால் அன்போடு ஊட்ட வீட்டில் பெற்றோர் இருக்க வேண்டும். 

குடிபோதையின் வருமானத்தில் இலவசங்கள் கொடுத்து அரசின் கஜானா எப்பொதும் காலியாக உள்ளது ஆனால் அரசியல்வாதி நடத்தும் மது ஆலைகள் எப்பொழுதும் இலாபத்தில் கொழித்து, சில ஆயிரம் மனிதர்கள் செல்வ செழிப்பில் வாழ பல கோடி மக்கள் அன்றாடங்காட்சியாக நாளை என்பதை பற்றி எந்த நம்பிக்கை இல்லாமல் அல்லல் படுகிறார்கள்.

கிழிந்த சட்டையை தாண்டி இந்த உடலெனும் சட்டையின் உள்ளே அந்த அருட்பெருஞ்ஜோதி உங்களுக்குள்ளும் விரிய தயாராகிவிட்டது. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற தத்துவத்தை தாங்களும் ஏற்க தயாராக்கவே வள்ளலார் தங்களை இந்த தைபூசத்தை முப்பெரும் விழாவாக நீங்கள் நடத்தும் ஆட்சியில் ஏற்பாடுகள் செய்ய வைத்துள்ளார். 

வள்ளல் யார் ? என்ற கேள்விக்கு விடையாக தங்களது உடைமைகள் அனைத்தையும் பொதுவுடைமை ஆக்கி அனைத்தையும் அரசாங்கத்திற்கு அளித்து விடுங்கள். தங்களது "மரணமில்லா பெருவாழ்வை" நோக்கிய பயணத்தினால் பல அரசியல் வியாபாரிகளும் தங்களை பின்பற்றி அவர்கள் மக்களிடம் பெற்ற செல்வங்களையும் நிதிகள் அனைத்தையுமே மக்கள் இடமே திருப்பிவிட்டால் நமது நாட்டில் வறுமை நீங்கும், வாடிய வயிரே இருக்காது.

வள்ளலை தாங்கள் நெருங்கிவிட்டீர்கள் !!! 
உங்களால் வள்ளல் தன்மை மிகுந்து நாட்டில் நல் "விடியல்" பிறக்கட்டும். 

சகிருட்டிஸ்
Sakritease 2023 

Translate

Contact Form

Name

Email *

Message *