Sunday, July 5, 2020

Sat on Kulam Police

காவலரைப் போற்று

நமது ஊடங்களுக்கு எது முக்கியம்  ? இன்றைய பரபரப்பு செய்தி அது மூலமா டி.ஆர்.பி  ரேட்டிங் அதன் மூலமா விளம்பர வருமானம். மும்பை நடிகர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் ? நடிகையை மூன்றாவதாக திருமணம் செய்தவரின் டைவோர்ஸ் கேஸ் என்னாச்சு ?

நாட்டோட எல்லையை பாதுகாக்கும் பணியில் இராணுவ வீரர்கள் 20 பேர் இறக்கிறாங்க. தமிழ் நாட்டை சேர்ந்த ஹவில்தார் திரு. பழனி வீர மரணம் எய்தினார். 

கரோனா நோய் தொற்று நம்மை ஒரு பக்கம் பயங்கரமா ஆட்டம் காட்டுகிறது.  எப்படி மக்களும் அரசாங்கத்தின் அங்கங்கள் எல்லோரும் தீவிரமாக தன் உயிரையும் பணையம் வச்சு போராட்டிட்டு இருக்காங்க.  இதில் காவல் துறையும் தன் பங்குக்கு சில காவலர்களையும் இழந்து பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். சில காவல் நிலையங்களையே நோய் தொற்றுக்கு பயந்து மூடி வைக்க வேண்டிய நிலைமை. காவல் துறையில் வேலை செய்யும் பல காவலர்களுக்கும் தினம் உடம்புக்கு கொடுக்க வேண்டிய ஒய்வு கிடைப்பதில்லை. தன் பணிச்சுமையை எப்படி எங்க இறக்கி வைப்பது என்று புரிந்துக் கொள்ள முடியாத மன அழுத்தம் மிக்க ஒரு வேலை.  கீழ் நிலையில் உள்ள பல போலிஸ்காரர்கள் பலரும் உணர்ச்சி மறத்து போன நிலையில் எல்லா அவமானங்களையும் தாங்கித்தான் வயிற்று பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது.


ஆனால் மீடியாவில் எப்பவுமே சாத்தான் குளத்தையே  ஒரே செய்தியாக்கி ஏற்கனவே சோர்ந்திருக்கும் மக்களையும் காவல்துறையையும் மேலும் சோர்வடைய செய்கிறார்கள்.

70 வருட விடுதலையில் நாம் தெரிந்து கொண்ட பாடம். பண பலம், ஆள் பலம் உள்ளவர்கள் மட்டுமே இங்கு அரசியல்வாதியாக நிலைச்சு நிற்க முடியும். சட்டத்தை வளைக்க தெரிந்தவர்களே மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.  இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து மட்டுமே பலரும் வேலைக்கு வரமுடியும்.  இப்படி லஞ்சம் கொடுத்து வாங்கியே இங்கு இருக்கும் அனைத்து வேலைகளும் நடக்கிறது.  இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவர் எப்படி ஒழுங்கா வேலை செய்வார் என்று நாம் எதிர்பார்ப்பது ???

இதற்கெல்லாம் என்ன தீர்வு ? சினிமாக்காரர்கள் பாணியில் நமது மக்களின் மன ஓட்டம் அறிந்த யாராவது ஒரு அந்நியனோ, ஒரு இந்தியன் தாத்தாவோ, ஒரு மாரியோ மொள்ள மாரியோ வந்து ஒட்டு மொத்தமா எல்லா கெட்டவர்களையும் அடிச்சு உதைச்சு கொன்னு போட்டுதான் மட்டுமே மாற்ற முடியும் என்று நாம எல்லோரும் முடிவிற்கே வந்துவிட்டோம்.  

இப்போது சாத்தான் குளத்தில் போலிஸ் கஸ்டடியில் வைச்சு இரண்டு வியாபாரிகளை விசாரித்ததில் அவர்கள் இறந்து போய்விட்டனர்.  இதில் சந்தேகத்திற்கு உண்டான காவலர் நால்வர் கைது இந்த நிமிடம் வரை.  இதில் உடனே நமது சினிமாக்காரர்களுக்கு கோவம் வந்துவிட்டது. “நான் போலிஸ் வேஷம் போட்டதற்காக வெட்கப்படுகிறேன்” என்கிறார் ஒரு நடிகர் “ நான் போலிஸ் ஸ்டோரியே எடுத்தேன், அதற்கு அவமானப்படுகிறேன் “ என்று பொங்குகிறார் ஒரு டைரக்டர்.  அய்யா நீங்கதான் போலிஸ்னா சாமின்னு சொல்லிட்டு  “நான் போலிஸ் இல்ல பொறுக்கி”அப்படின்னு வசனம் வச்சீங்க.  இந்த முரண்பாடு உங்ககிட்ட மட்டும் இல்ல நம்ம சமுதாயம் முழுவதுமே முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது.

சினிமா காரர்கள் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால் இன்றைய போலிஸ்காரர்களின் நிலைமை “சின்னதம்பி” படத்தில் வரும் பாடல் போல “குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி பாட சொல்கிற உலகம் “.  காவலர்கள் அவர்கள் பற்றி வரும் எந்த விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முடியாது. அவர்கள் தேவையான ஒய்வோ விடுப்போ வசதிகளும் கிடையாது. பெண் காவலர்களின் நிலைமை அவர்கள் வெளியிடங்களுக்கு போகும் போது சரியான கழிவறை வசதிகள் கூட கிடையாது.  இவர்களுக்கு ஒரு யூனியன் கூட கிடையாது.  காவலர்கள் மிகுந்த மன உளச்சலில் தான் வேலை செய்கிறார்கள்.  அதனால் அவர்கள் நாளடைவில் ஒரு உணர்ச்சியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

                               

யானைகளை புத்துணர்ச்சி முகாமிற்கு அனுப்புவது போன்று     (https://ta.wikipedia.org/s/7gu4 ), காவலர் ஒவ்வொருவரையும் வருடத்திற்கு ஒரு 15 நாளாவது அவர்களது உடல் , மன புத்துணர்ச்சி முகாமிற்கு அனுப்பவது தான் சிறந்தது. மனதளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தான் நீதிபதிகளுக்கு வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை வழங்கப்படுகிறது.  உடல் , மனம் இரண்டுமே பாதிக்கபடக் கூடிய காவலருக்கு தின, வார, மாத, வருடாந்திர ஒய்வு அளித்தால் தான் அவர்களிடம் நாம் தரமான சேவையை எதிர் பார்க்கலாம்.

சாராயம் குடிக்கிற சீன் இல்லாம இன்று ஒரு சினிமா வரமுடியுமா ?? அடிதடி. கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களையே இன்று ஹீரோ என்று காட்ட வேண்டியுள்ளது. ஏனென்றால் இன்றைய சினிமா எடுக்க பணம் போடுபவர்கள் பலரது பிண்ணனியும் சாராயத்துடனும், ரௌடிகளுடனும், அரசியலுடனும் தொடர்பு இருப்பவர்களே. 

இறந்த வியாபாரிகள் வீட்டிற்கு எதிர்கட்சி ஆளும் கட்சியும் போட்டி போட்டு கொண்டு நிதி வழங்குகிறார்கள். இது தவிர அரசாங்க நிதி உதவி வேறு.  இதிலேயே பிரச்சனையின் மூலக் கூறு எங்கே உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

 இராணுவ வீரருக்கு கடும் குளிரில் எதிரியிடமிருந்து நம் நாட்டை காப்பதற்காக உயிர் துறந்தும்,  இன்று அவர் குடும்பத்திற்கு வழக்கமான இழப்பீடு. கரோனாவில் நமக்காக பாடுபட்டு இறந்த காவலருக்கும் , மருத்துவருக்கும் வழக்கமான இழப்பீடு. பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு, இலஞ்சம், ஊழல்.  தமிழ்நாடு மிகப்பெரிய குழப்பமான ஊழல் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது.

காவல்துறை, அரசியல், சினிமாத்துறை, நீதிபதி , வக்கீல் என்று அனைவருமே இந்த சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் தான்.  யாரும் வானத்திலிருந்து  குதித்து  வரவில்லை. குற்றம், குறை, பித்தலாட்டம், ஊழல், இலஞ்சம், அதர்மம் இல்லாத துறையே இல்லை. அதே சமயம் இந்த துறைகளிலும் இத்தனை இக்கட்டான சவாலான சுழ்நிலையிலும் நேர்மையாக, தன்னால் இயன்றளவிற்கு நன்மை செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். நால்வர் செய்யும் தவறை வைத்து நாலாயிரம் பேரை குறை சொல்ல முடியுமா ? குறை சொல்லும் அருகதை நமக்கு இருக்கிறதா ?

எங்கே நமது சமுதாயத்திற்கு இடறுகிறது ?

தமிழ், தமில், தமிள் என்று ஒரு உணர்ச்சி வயப்படும் கூட்டமாகவே மாற்றப்பட்டுவிட்டோம்.  என் மொழி தொன்மையான மொழி . நாட்டின் பிரதமரே லடாக்கில் இராணுவத்தினரிடம் பேசும் போதும் திருக்குறளை தான் மேற்கோள் காட்டுகிறார் என்று பெருமை கொள்கிறோம்.  ஆனால் நாம் நமது எதிர் கால தலைமுறை பெருமை கொள்ளும் படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.  நமது  முன்னோர்கள் அவர்களின் அடைந்த பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாக கட்டிடக் கலை, சிற்பக் கலை, இலக்கியம் என்று விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மிகத் தெளிவாக பிற மனிதர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதற்கு புறநானூறும் உள்மன வளர்ச்சிக்கு அகநானூறும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.  இதனை இன்னமும் எளிமையாக்கி திருக்குறள், ஆத்திச்சூடி, திருமந்திரம் என்று நாம் வாழ வழிக்காட்டிச் சென்றார்கள்.

ஆனால் நாம் இன்று நவீனம் என்ற போதையில் மயங்கி இயற்கையை வெகுவாக சிதைத்து வெறும் ஒரு கிருமிக்கு பயந்து ஊரடங்கி போயிருக்கிறோம்.  நம்மை உணர்ச்சிவசப்படுத்த ஒரு  breaking news ற்காக காத்திருக்கிறோம்.  நமக்கு இயற்கையோடு ஒன்றி வாழத் தெரியவில்லை.  இயற்கையில் வளரும் தாவரங்களை அவற்றின் மேன்மையை நாம் உணரவில்லை. மலைகளை வெறும் குவாரிகளாக்கிக் கொண்டிருக்கிறோம், ஆறுகளை வெறும் சாயக் கழிவு விடும் சாக்கடைகளாக்கிக் கொண்டிருக்கிறோம்.  உணவெல்லாம் நச்சு கலந்தே உண்ணுகிறோம்.

“இயற்கைக்கு திரும்பும் பாதையை” நமக்கு இப்பவும் காட்டுவதற்கு பல ஞானியர்களும் வந்த வண்ணமே உள்ளனர்.

அவர்கள் காட்டிய வழியில் மலையெங்கும் மரங்கள் நடுவோம், ஆறுகளை ஓடச் செய்வோம், உழுதுண்டு வாழ்வோம்,  இயற்கையை வழிப்படுவோம், கலைகளை வளர்ப்போம், நமது முன்னோர் காட்டிய பண்பாட்டுடன் வாழ்வோம். நமது எதிர் கால சந்ததியினர் நம்மை நினைத்து பெருமை அடையும் படி வாழ்வோம்.

நரகம் என்பது தனியான ஒரு இடம் அல்ல நாம் இன்று ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலே. சாத்தான் குளம் தமிழகத்தில் மட்டும் இல்லை இன்று பூமியில் பல பகுதிகளும் சாத்தான் குளமாகவே காட்சி தருகிறது.  சாத்தானகள் ஆகிய நாம் உருவங்களை அழிக்க முற்படாமல் தீய எண்ணங்களை அழிக்க முற்படுவோம்.  நாமே தெய்வங்கள் ஆவோம், இறைமை என்னும் உன்னத இயற்கையின் பேராற்றல் தன்மையை உணர்வோம்.

 வாழ்க வளமுடன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Translate

Contact Form

Name

Email *

Message *