Tuesday, December 8, 2020

Farm-err protest விவசாயிகள் போராட்டம் அவசியம் தானா ?

விவசாயிகள் போராட்டம் அவசியம் தானா ?

 

அன்றாட வாழ்வில் அதிகம் ஒற்றுமையில்லாமல் வாழும் விவசாயிகள் இந்த மசோதாக்களை எதிர்க்கவாவது ஒன்றாக கூடியுள்ளது ஆரோக்கியமானது தான்.

ஆனால் இந்த போராட்டத்தில் அதிக அளவில் கலந்துக் கொண்டுள்ளது கோதுமை பயிர் செய்யும் பஞ்சாப் மாநில விவசாயிகளே. மற்ற மாநில விவிசாயிகள் எதிர்த்தாலும் பஞ்சாப் விவசாயிகளைப் போல் மாதக் கணக்கில் போராட்டத்தில் இறங்கவில்லை. ஒன்று பஞ்சாப் தில்லிக்கு மிக அருகில் இருப்பதாலும் மற்ற மாநிலங்கள் அதிக தூரத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.





இந்தக் கட்டுரையை எழுதுவது நம்மாழ்வார் அய்யாவின் வழிக்காட்டுதலான விவசாயி வியாபாரி ஆக வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் தான்.

இன்றைய விவசாயியின் நிலைமை என்ன ?

நெல் (அரிசி )/ கோதுமை விவசாயிகள் – நெல் தென்னிந்தியாவிலும் கோதுமை வட இந்தியாவிலும் அதிகம் பயிரடப்படும் இரு முக்கிய தானியங்கள் ஆகும். இதனை உற்பத்தி செய்யும் பெரும்பாலான விவசாயிகள் மத்திய / மாநில நேரடி கொள்முதல் நிலையங்களுக்குத்தான் அனுப்புகிறார்கள். இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் விலை அரசாங்கம் அவ்வப்போது நிர்ணயம் செய்யும் விலைதான்.

கடந்த 50 வருடங்களில் அரசு ஊழியரின் சம்பள உயர்வையும் நெல்லின் கொள்முதல் விலையையும் ஒப்பு நோக்கினால் அரசு ஊழியரின் சம்பளம் 500 லிருந்து 50,000 ஆகி இருக்கிறதென்றால் விவசாயப் பொருட்களுக்கு 50 லிருந்து 1000 ஆகியிருக்கிறது. 100 மடங்கு சம்பள உயர்வுக்கு 20 மடங்கு மட்டுமே விவசாய பொருட்களின் விற்பனை விலை கூடியிருக்கிறது.

நேரடியாக வியாபாரியிடம் விற்கும் விவசாயிகளும் வியாபாரிதான் விலைச் சொல்லுவார் அதுவும் அந்த சமயத்தில் மொத்த உற்பத்திக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளி பொறுத்தே விலை வழங்கப்படும். விவசாயி செய்யும் உற்பத்தி செலவினங்கள் ஏற்ப விலை நிரணயிக்கப்படுவதில்லை. விவசாயிக்கு இலாபமா நஷ்டமா என்பது தானியம் அறுவடைக்கு வரும் போது நாட்டில் இருக்கும் நிலைமையை பொறுத்து.



 

கரும்பு விவசாயிகள் :

கரும்பு விவசாயிகள் கரும்பு ஆலைகளை நம்பியே உற்பத்தி செய்து ஆலை ஆர்டர் கொடுத்தால் மட்டுமே வெட்டி அவர்கள் எடை போடும் வகையில் ஆலைகள் நிரணயிக்கும் விலையில் அவர்கள் பணம் கொடுக்கும் வரை காத்திருந்து விற்க வேண்டிய சூழல். அதுவும் கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பிறகு பின் தான் அறுவடை செய்ய முடியும். நஷ்டம் என்றால் ஒரு வருட உழைப்பு வருமானம் அனைத்தும் வீண். இது வரை அதிகம் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளில் கரும்பு பயிரிட்டு போனவர்களே அதிகம்.

 


காய்கறி விவசாயிகள் :

தக்காளி, உருளைக் கிழங்கு, கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் உற்பத்தி செய்து விற்கும் விவசாயிகள். சந்தைக்கு எடுத்துக் கொண்டு போவார்கள் அங்கு அந்த காய்கறி அன்று எத்தனை பெட்டி அல்லது லாரிகள் வந்துள்ளது என்பதற்கேற்ப விலை முடிவு செய்பவர்கள் வியாபாரிகள். விலை கட்டுப்படியாகாமல் கொண்டு போன வண்டிக்கு கூலி கூட கிடைக்காமல் தக்காளியை சாலையில் கொட்டிவிட்டு வரும் அவலம் பலமுறை நடந்துள்ளது.



இதை தவிர மஞ்சள், புளி , பழங்கள் என்று எந்த வகை விவசாயிகளும் வியாபாரிகள் விதித்த விலையில் மட்டுமே பொருளை விற்க முடியும்.

தங்கம் விற்கும் ஒவ்வொரு நகைக்கடையும் செய்கூலி சேதாரம் போடாமல்  விற்பதில்லை. 



பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளுக்கு செய்கூலி என்றால் என்னவென்று தெரியாது. விவசாயி மற்றும் அவர் குடும்பத்தாரின் உழைப்பிற்கு இது நாள் வரை எவ்வளவு கூலி போட வேண்டும் என்றே யாருக்கும் தெரியாது. இந்த சூட்சமம் தெரியாமல் தான் இன்று வரை விவசாயிகள் தினந்தோறும் கடனில் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.

அதனால் தான் பெரும்பானமையான விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை எப்பாடு பட்டாவது வேறு ஒரு தொழிலுக்கு வேறு ஒரு இடத்திற்கு நகர்த்தி தங்கள் பிள்ளைகள் சௌகர்யமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதுவே இன்றைய யதார்த்த நிலை. இந்த சூழ்நிலையிலும் பல விவசாயிகள் பொருளாதார ரீதியாக வெற்றிக் காண்கிறார்கள். அவர்கள் சந்தை பொருளாதாரத்தை உற்று நோக்கி சந்தைப்படுத்தலில் தெளிவு பெற்று தன்னால் செய்யக் கூடிய அதிகம் இலாபம் தரக்கூடிய பயிர்களை சரியான காலக்கட்டத்தில் சரியான வியாபாரிகள் மூலமாகவோ அல்லது நேரடி விற்பனை மூலமாகவோ அல்லது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்று வளர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் பெரும்பான்மையான விவசாயிகள் திக்கு தெரியாத காட்டில் நிற்கிறார்கள்.  அவர்கள் கிராமத்தில் எல்லோரும் என்ன பயிர் செய்கிறார்களோ அதே பயிரை செய்துவிட்டு மொத்தமாக வியாபாரி கொடுக்கும் விலையை வாங்கிக் கொண்டு தலைவிதியை நொந்துக் கொண்டு வாழும் விவசாயிகளே அதிகம்.



நெல் 78 கிலோ மூட்டை இந்த 2020ல் ரூ. 1000/- விற்கிற விவசாயிகள் பலர் இருக்கிறார்கள்.  ₹13/- ஒரு கிலோவிற்கு.  ஆனால் அது உற்பத்தி செய்யப்ப்டும் அதே கிராமத்தில் அரிசி குறைந்தபட்சம் ₹35/ கிலோவிற்கு குறைந்து கிடைக்காது. அதாவது ₹13/கி. நெல் ₹21/கி அரிசியாக மாற்ற முடியும். தனது கிராமத்திலேயே ₹35/- விற்க வாய்ப்பிருந்தும் அப்படி விற்காமல் மொத்தமாக வியாபாரியிடம் விற்று அன்றே வரும் காசை பார்த்துவிட்டு அடுத்த பயிர் வைக்க போய் விடுகிறார்கள்.

இந்த நிலை மாற விவசாயி உலகத்தில் நடப்பவற்றை தெளிவாக கற்க வேண்டும். ஒரே பயிரை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாற வேண்டும். உள்ளூரில் சந்தைப்படுத்த பழக வேண்டும். உற்பத்திக்கு ஆகும் செலவை தன் வேலைக்கான , நேரம் செலவிட்டதற்கான ஈடு செய்யும் வகையில் விவசாயியே விலை சொல்லி கொடுக்க கற்க வேண்டும். தொலைபேசி கூட தெரியாமல் இருந்த காலம் போய் அனைவர் கையிலும் கைபேசியில் பேச விவசாயிகளும் ஆரம்பித்துவிட்டனர். ஆன்ட்ராய்டு போன் உபயோகிக்கவும் பலரும் கற்று வருகின்றனர்.



இந்த சூழ்நிலையில் இந்த மூன்று விவசாய மசோதாக்களுக்கு வருவோம். விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவதே அடிப்படை நோக்கம் என்கின்றனர். நல்ல நோக்கம் வர வேற்போம்.

ஒப்பந்த அடிப்படையில் நேரடியாக நிறுவனங்களுக்கு விற்க வாய்ப்பு. இதுவும் நல்ல விஷயம் தான். முன் கூட்டியே நான் இந்த பொருளை இவ்வளவு நாட்களுக்குள் இந்த விலையில் இந்த பொருளை உங்களுக்கு விற்கிறேன் என்ற உடன்படிக்கை போடுவது.  எல்லாம் நல்ல படியாக நடந்தால் நன்மையே. ஆனால் இங்கு இன்று பெரும்பான்மையான விவசாயிகளுக்கு ஒப்பந்தம் என்பது என்ன என்று தெரியாது. ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தெளிவில்லை. பணம் பரிவர்த்தனை எப்படி நடக்கும் என்ற பயம். கரும்பாலை முதலாளிகள் போல் இழுத்தடிப்பார்களா?? என்கிற கவலை.

இந்த இடத்தில் ஒப்பந்தம் என்பது நிறுவனங்கள் தயாரித்து தரும் பத்திரங்களில் விவசாயி கையெழுத்து மட்டும் போடும்படி இருக்குமா ? விவசாயி தனக்கு ஒத்து வராது என்று தோன்றும் விஷயங்களை நீக்கவோ மாற்றவோ உறுதியாக சொல்ல எழுத தெரிந்திருக்க வேண்டும். நிறுவனங்களால் வக்கீல்களை வேலைக்கு வைத்து பத்திரம் தயாரிக்க முடியும் பிரச்சனை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல செலவழிக்க முடியும். விவசாயியால் முடியுமா ??? இதற்கு விவசாயிக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு சம தளத்தை அரசாங்கத்தால் ஏற்படுத்தி தர முடியுமா ????

இன்று வியாபாரிகளிடம் கைக்கடி நிற்கும் விவசாயி நாளை நிறுவனங்களிடமும் கைக்கட்டி அவர்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டு கைக்கட்ட வேண்டுமா ? என்பதே கவலை.

தெரிந்த பேய்க்கு பயந்து தெரியாத பூத்ததிடம் மாட்டிக் கொண்டு விடுவோமா என்ற பயம்.

இதனை அரசாங்கம் இந்த  சட்டங்களில் அனைத்து அமசங்களையும் விலாவாரியாக விளக்க வேண்டும். விவசாயிகளுக்கு அட்சேபம் இருக்கும் அம்சங்களை மாற்றி அமைத்து விவசாயிக்கு அரசாங்கம் நமக்கு நன்மை தான் செய்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இதையும் தவிர்த்து விவசாயி நேரடியாக வாட்சப், பேஸ்புக் மற்ற சமூக வலை தளங்களில் மூலமாக நேரடியாக வாடிக்கையாளரை தேடி விற்பதற்கு இந்த சட்டங்களில் ஏதாவது தடை இருக்கிறதா ? என்று நாம் தெளிய வேண்டும்.

நம்மாழ்வார் அய்யா கூறியபடி நம்முடைய உற்பத்தி அதிகபட்சம் 10  கிமீ சுற்று வட்ட தூரத்திற்குள் வாடிக்கையாளர்களை கண்டறிந்து அவர்களின் மற்றும் நமது வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும்படியாக தன்னிலை உயர்த்தி, தன்னுடைய நிலத்தில் தனக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் தன் நிலத்தில் அல்லது தனது கிராமத்தில் உற்பத்தி செய்து தற்சார்பு வாழ்க்கையை நோக்கி கொண்டு செல்வதே.  நாம் அன்றாட வாழ்வில் நிம்மதியான வாழ்க்கை வாழ எளிய வழி.  இதற்கு நாம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து அதனை உற்று நோக்கி நமது முன்னோடிகள் நம்மாழ்வார் அய்யா, சுபாஷ் பாலேக்கர் அய்யா அவர்கள் வழிக்காட்டியபடி பல பயிர் சாகுபடி இயற்கை வழி உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து செலவுகளை குறைத்து விற்பனை விலையை விவசாயியே முடிவு செய்து நல்ல வளமோடு வாழ வேண்டும். இந்த வருடத்தில் உலகயே அச்சுறுத்திய கரோனா கிருமி காலத்தில் ஊரடங்கில் இருந்தாலும் விவசாயி செழிப்போடு வாழ வேண்டும். கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும்.

அஞ்சு நதிகள் ஓடும் பஞ்சாப் மாநிலத்தில் இரசாயன உரங்களை மிகுதியாக பயன்படுத்தி நிலமெல்லாம் மிகவும் பாழ் அடைந்துள்ளது. கரும்பு விவசாயிகள் பண்ணை கழிவுகளை உரமாக்காமல் அதனை எரித்து காற்று மண்டலத்தை மாசாக்கி பல காலமாக பதிண்டாவிலிருந்து இராஜஸ்தான் மாநிலத்திற்கு போகும் தொடர் வண்டிக்கு  “கேன்சர் எக்ஸ்பிரஸ்” என்று கூறும் அளவிற்கு கேன்சர் நோயாளிகள் அதிகமாகி வருகிறார்கள்.  இந்த மாநிலத்தவர் இயற்கை தந்த அருட்கொடையாம் ஆறுகளை அதன் வளத்தை கூறுப்போட்டு இன்று நாற்சந்தியில் கடுங்குளிரில் போராடிக் கொண்டிருக்கின்றனர். 




மற்ற தொழில்களைப் போலவே விவசாயமும் வியாபாரத்திற்கு அரசாங்கத்தின் பிடியிலிருந்து வெளியில் வருவதே சிறந்தது.  எனக்கு வியாபாரம் தெரியாது , தெரிய வேண்டாம் என்று விவசாயி ஒதுங்கக் கூடாது. பல இயற்கை இடர்பாடுகளை தாண்டி பல பயிர்களை வெற்றிக்கரமாக உற்பத்தி செய்யும் நமக்கு வியாபாரம் செய்வது எம்மாத்திரம்.

ஒரு பேனா வாங்கப் போனாக் கூட கடைக்காரன் சொல்லற விலைக்குத்தான் நாம் வாங்குறோம். விவசாயி தன் பொருட்களுக்கு தானே விலை சொல்லும் தன்னம்பிக்கை பெற்று வளம் பெறுவதே விவசாயியின் இலட்சியமாக இருக்க வேண்டும். 

விவசாயிக்கு தன் பொருளின் மதிப்பு தெரிந்தால் தான் விவசாயியின் மதிப்பு உலகத்தவருக்கு தெரியும். 


கிருஷி-ணா குமார் சத்யவாகீஸ்வரன்

 

(கிருஷி என்றால் வடமொழியில் விவசாயி என்று பொருள் )

https://www.facebook.com/KRISHInaFARMER


Translate

Contact Form

Name

Email *

Message *