26.ஜுன்.2018
எட்டு வழிச் சாலை = இயற்கை வள பேரழிவும்
+ அமைதி குலைக்கும் முயற்சிகளும்
துக்ளக் ஆசிரியர்
திரு. குருமூர்த்தி அவர்களுக்கு,
இன்று கைகளில்
கிடைக்கப்பெற்ற 4.7.2018 தேதியிட்ட துக்ளக் வார இதழில் வெளிவந்துள்ள திரு. வசந்தன்
பெருமாளின் " வேலை வாய்ப்பு + தொழில்
வளர்ச்சி = எட்டு வழிச் சாலை " என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரைக்கு மாற்று
கருத்தினை பதிவிடவே இந்தக் கட்டுரை.
வளர்ச்சி என்பது என்ன ?
சாலைகள்,
அதி நவீன கார்கள், கான்கீரீட் வீடுகள், மின்னனு சாதனங்கள், பல் நோக்கு மருத்துமனைகளில்
மருத்துவ சிகிச்சை, நினைத்த போதெல்லாம் பறந்து செல்ல விமான நிலையங்கள் தான் வளர்ச்சி
என்றால் நமது நாட்டின் பாரம்பரியம் , கலாச்சாரம், பண்பாடு சொல்லப்பட்டுள்ள கடைபிடிக்கப்பட்டு
வந்துள்ள வழக்கங்கள் , நம்பிக்கைகள் ஆகியவற்றை அடியோடு நீக்கி வெறும் நுகர்வு பொருளே
மனிதன் என்ற இழி நிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
" என்றாள் அவ்வை பாட்டி. ஏனென்றால் மனிதராய் பிறந்தால் தான் ஆன்மீகத்தின் மிக
உச்ச நிலையை தொட முடியும் என்பதால் அதுவும் இயற்கையை உள்ளே பொதிந்து கிடக்கும் உள்
ஆன்மிகத்தினாலே சாத்தியம். இன்றும் மரங்களையே
வெட்டாத இயற்கை வளங்களை அப்படியே பாது காக்கும்
நார்வே, கனடா ஆகிய நாடுகள் தான் முன்னெறிய நாடுகள் வரிசையிலும், தனிமனித மகிழ்ச்சி
குறீயிட்டிலும் முன்னணியில் உள்ளன.
இராமனை விரும்பும் மோடிக்கு ஏன் வாக்களித்தோம்
?
ஓரு சலவை
தொழிலாளியின் கருத்திற்கும் மதிப்பளித்து தன் மனைவியையே காட்டுக்கு அனுப்பிய அந்த இராஜா
ராமனைப் போல் மாற்றுக் கருத்திற்கும் மதிப்பளிப்பார் என்று நம்பித்தானே வாக்களித்தோம்.
இயற்கையை காக்க வேண்டும், மரங்களை வெட்ட வேண்டாம் , மலைகளை வெட்ட வேண்டாம் என்று கூறுபவர்கள்
எல்லாம் நக்சலைட், மாவோயிஸ்ட், தீவிரவாதி என்றால், இயற்கை விரும்பும் எவரும் தேச விரோதி
என்றாகிவிடுமே. குரங்கு உருவ அனுமனையும், யானை
முக கணபதியையும் வணங்குபவன் எப்படி குரங்குகளும், யானைகளும் புரளும் காட்டினை மலைகளை
அழிப்பது??? நாம் காலம் காலமாக நம்பும் போற்றும் இயற்கை தெய்வங்களை வணங்கி வாழத்தானே.
இன்று இந்து என்று அடையாளப்படுத்தப்படும் மதம் காலம் காலமாக இயற்கை வாழ்வியல் ஒத்து
வாழ்ந்த இனம் தானே. இயற்கையின் ஒவ்வொரு உருவத்தையும் தெய்வங்களாக வழிப்பட்டதால் தானே
பல்லாயிரம் தெய்வங்களாக கொண்டாடுகின்றோம். இதனை நம்பும் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அவர்
இயற்கையை தெய்வமென போற்றி வழிப்படுவார் என்று தானே நம்பி ரோம் ராஜ்ஜியத்திற்கு முற்றுப்
புள்ளியிட்டு ராம் ராஜ்ஜியமென நம்பினோம்.
நமது முன்னோர்கள் அறிவியலில் பின் தங்கியவர்களா
????
நாம் இந்தக்
காலத்தில் ஒரு தவறான எண்ண ஒட்டத்தில் இருக்கிறோம். நமது முன்னோர்கள் - முனிவர்கள் காலத்தில்
ஏதோ அறிவியலில் பின்தங்கி இருந்தது போலவும்
நாம் ஏதோ அறிவியலில் முன்னேறிய காலக்கட்டத்தில் இருப்பது போலவும் நம்புகிறோம்.
ஆனால் உண்மையில்
மாயமான் மாரீசனின் வேகத்தை கண்டு ( திரு. வசந்தன்
பெருமாள் கவனிக்க ) மயங்கிய சீதையை தூக்கி செல்ல விமானத்தில் வந்தான் என்கிறார் வேடுவர்
வால்மீகி. வானரர்களின் பகுதிகளை தங்களின் மாய
சக்தியினால் உருவாக்கிய சாதனங்களை கொண்டு துன்புறுத்தியதால் தான் பிராமணரின் மகனாக
பிறந்தும் சக்தியை தவறாக பயன்படுத்தியதால் இராட்சசனாக உருவகிக்கிறார்.
அத்தகைய நவீன இயந்திரங்களுடன் இருந்த இராவண கூட்டத்தை வானரங்களின் படையை கொண்டு
அழித்தவர் மனித உரு கொண்டு மரவுரி தரித்த மரத்தினால் ஆன ஆயதங்களை கொண்ட இராமர் என்கிறது
இராமாயணம். இராமாயணம் பற்றி இன்னமும் தெய்வத்திரு.
சோ அவர்களின் கட்டுரைகள் வெளிவரும் பத்திரிகையில் காவியத்தை மேற்கோள் காட்டும் படி
உங்கள் கட்டுரை ஏற்படுத்தி விட்டது.
மாட்டு சாணத்திலேயே
எளிமையாய் மீத்தேன் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறப்போ யாராவது அதிக செலவழிச்சி 6000 அடியில்
அம்பதனாயிரம் கோடி செலவழிச்சு எடுப்பாங்களா ??? எது தொழில் நுட்பம் ??? மாடு காப்பாத்தனும்னு
நினைக்கைறது நல்ல விஷயம். அது தான் சாகற வரைக்கும் சாணம் போட போகுதே , அப்ப ஒரே கல்லுல
ரெண்டு மாங்கா - மாட்டையும் காப்பாத்தி மீத்தெனையும் எடுத்துக்கலாம். அதுக்கப்புறம்
பைப்லைன் போடறோம் சொல்லிட்டு விவசாய நிலத்தை புடுங்க வேண்டாமே. வீட்டுக்கு வீடு மீத்தேன் எரிவாயு தயாரிக்கலாமே.
வேகம் என்னும் மாயையில் சிக்கினால்
அசோகவனத்தில் சிறைவாசம் தான் கிட்டும் என் கிறது இராமாயணம்.
சமீபத்தில்
வெளிவந்த "krishna key" என்கிற நாவலில்( best seller ) அதன் ஆசிரியர் திரு,
அசுவின் சாங்கி இந்தியாவில் இன்று இருக்கும் 12 ஜோதிர் லிங்களூமே 12 அணு உலைகள் தான்
என்கிறார். இதனை கிருஷ்ணரே வெளிப்படுத்துவது போல் எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட
விஞ்ஞான முன்னேற்றத்தை கண்ட கிருஷ்ணனின் காலத்திலும் அந்த இடையர் குல சிறுவன் மலையை
வணங்கினால் போறும், மரங்களை தொழுதால் போறும், பசுவை வளர்த்தல் சிறப்பு என்கிறார். கோவர்த்தன
மலையை தூக்கி இருக்கும் சிறுவனின் படத்தை பூஜை
அறையில் பூஜிக்கும் நாம் எப்படி மலையை அழித்தாவது வேகமாக அந்த மலையை அலுமினிய ஃபாயிலாக்கி (aluminium foil ) சப்பாத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தி
குப்பையிலே போட முடியும்.
திருவண்ணாமலையும் வெளிநாட்டினரும்
:
இன்றைக்கும்
முழுமையான நகரமாகாத திருவண்ணாமலையை உலகத்தின் ஆன்மீக தலை நகரமாக்கும் அளவிற்கு வெளினாட்டினர் வந்து குவிவதற்கு 8 வழிச்சாலை
காரணமில்லை, அந்த கோவணம் மட்டுமே கட்டிய அண்ணாமலையின் மனித வடிவான இரமண மகரிஷியும்
அந்த 1-1/2 கோடி வருடங்களாக வாழும் மலையை இருப்பிடமாக கொண்டுள்ள பல சித்தர்களும் தான்
காரணம். இது போல் திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றியிருக்கும் மலைகளும் குன்றுகளும். சேர்வராயன், கல்வராயன் , கவுந்தி வேடியப்பன் மலை,
கஞ்ச மலை, பருவத மலை, தீர்த்த மலை என்று இங்கு சுற்று வட்டாரத்தில் அனைத்தும் மலைகளுமே
பல பல ஜீவராசிகளின் வாழ்வதாரம். இந்த பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல எல்லா உயிரினங்களுக்கும்
சொந்தம். அதுனால தான் இந்த தத்துவத்தை உணர்தத்தான்
இந்து மதத்தில் விஷ்ணூ மீனாக, பன்றியாக, சிங்கமாக, ஆமையாக, மனிதமாக வந்ததாகவும் வினாயகருக்கு
மூஞ்சுரு வாகனமாகவும், முருகனுக்கு மயில், சேவல் , அம்மனுக்கு சிங்கம், சிவனுக்கு காளை
என்று நாம் நம்மை சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும் வணங்க வேண்டும் என்று இந்த நடைமுறையை
ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நமது முன்னோர்கள்
குன்று இருக்கும் இடமெல்லாம் முருகனின் கோட்டம் என்ற நடைமுறை கொண்டுவந்ததும், திருமலையை
பெருமாளாகவும், பழனி மலையை முருகனாகவும், கயிலாய மலையை சிவனாக பாவிப்பதும் இந்த இயற்கை
பேர் எழிலை காக்கவே. இதில் என்ன வினோதமென்றால்
இதனை இன்று காப்பாற்ற வேண்டும் என்று போராடும் பலர் கடவுள் மறுப்பாளர், நாத்திகம் பேசக்
கூடியவர்கள். கடவுள் என்று கூறும் பலர் வளர்ச்சி
என்றும் வேகம் என்றும் கூறுவது ஆன்மீக விரோதமாகவே தெரிகிறது. கல்லையும் கடவுளாக நினைப்பவர்கள் கல் தரும் மலையை
அழிக்கலாமா ???? ஒரே குழப்பமாய் இருக்கிறது - பெரிய கல்லை காப்பாத்த நினைக்கிறவன நாத்திகன்னும்
அழிக்க நினைப்பவன் ஆத்திகன்னு எப்படி கூறமுடியும் ????
இதே
10,000 கோடி ரூபாய்களை தந்தால் இதே போல் ஒரே ஒரு
மலையையாவது உருவாக்கி காட்ட முடியுமா ????
குப்பையை வேண்டுமென்றால் மலை மலையாக குவிக்கலாம். அப்புறம் என்ன ஆகிஸிஜன் தான்
டப்பாவில் வந்துவிட்டதே 635 ருபாய்க்கு சுவாசித்துக் கொண்டே போக வேண்டியதுதான். மலையை செய்யக் கூடியது இயற்கை மட்டுமே. இதே பத்தாயிரம் கோடியை எங்களிடம் தாருங்கள் திருவண்ணாம்லை,
தருமபுரி , கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களிலில் இருக்கிற அனைத்து மலைகளிலேயும் உயரமான மரங்களை வளர்த்து
தமிழகத்திற்கு தேவையான அனைத்து மழையையும், நதிகளையும் உருவாக்கி, எல்லா நிலங்களையும்
விளை நிலமாக்கி அனைவருக்கும் நிரந்திர வேலை வாய்ப்பை உருவாக்கி தர முடியும்.
யோகாவும் வளர்ச்சியும் :
யோகா என்பதன்
அடிப்படை விளக்கமே இயற்கையோடு ஒன்றிணைதலே. இயற்கையான மலைகளையும் மரங்களையும் அழிச்சிட்டு
எப்படி ஒன்றிணைவது. அகத்தியர் என்ற மாமுனிவர் பொதிகை மலையை இன்றும் காக்கிறார் என்று
கூறப்படுகிறது. அவருக்கு கும்ப முனி என்ற பெயரும் உண்டு. சராசரி மனிதர் ஒரு மூச்சிற்கு
3 நொடிக்குள் விடுகிறார் என்றால் இந்த முனிவரால் ஒரு மூச்சிற்கே பல வருடங்கள் ஆகும்
அளவிற்கு மிக ஆழ்ந்த மூச்சு எடுப்பாராம், அதனால் அவரால் அவரின் உடலில் 4000 ஆண்டுகள்
வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது மூச்சு எந்த அளவிற்கு நிதானமாக்குகிறோமோ அந்த அளவிற்கு
வாழ் நாள் கூடுகிறது. அது போல் வாழக்கையில் எந்த அளவிற்கு நிதானமாக வாழகிறோமோ அந்தளவிற்கு
அதிக நாட்கள் வாழலாம்.
வேகமான வாழ்க்கைக்கு
அடிக் கோலும் அதி வேக நெடுஞ்சாலைகள் நம்மனித இனத்தை வேகமாக கொன்றே தீரும். இந்தியாவிலேயே
தமிழ்நாடு தான் சாலை விபத்துகளிலும் மரணங்களிலும் என்றும் முன்னணியில் உள்ளது அதற்கு
இன்னொரு நெடுஞ்சாலை என்னும் சவக்குழி எதற்கு ?
துக்ளக் ஆசிரியர்
பெரிதும் மதிக்கும் காஞ்சிப் பெரியவர் வணக்கத்திற்குரிய சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்
என்றென்றும் நடந்தே பல ஊர்களுக்கு சென்று தனது
தெய்வ வாக்கினை வழங்கினார் ஆனால் வாகனங்களில் சென்று பரப்பினவர்களை காட்டிலும் நடந்தே
சென்று பரப்பியவரின் மகத்துவம் தானே அவரை மகா பெரியவராக காட்டுகிறது. எளிமையே நிதானமே
என்றும் உயர்வுக்கு வழி.
மத்திய அரசு
கடந்தாண்டு , அஸ்ஸாமில் தனி ஒருவராக 1350 ஏக்கரில் காடுகளை உருவாக்கி காட்டு விலங்குகளை
மீண்டும் வரவழைத்த திரு . ஜாதவ் பயெங்க் என்பவருக்கும், இயற்கை விவசாயத்தின் தந்தை
என்றழக்கப்படும் திரு. சுபாஷ் பாலேக்கருக்கும், தமிழ் நாட்டின் சேர்ந்த 99 வயதே ஆன
யோகா ஆசிரியர் திருமதி.நானாம்மாள் ஆகியோருக்கு பத்ம ஷ்ரீ பட்டம் வழங்கி உள்ளது இயற்கை
வாழவியலுக்கு ஆதரவாகவும் உள்ளது.
வேகத்திற்கு
எதிர்மறை விவேகம். விவேகானந்தரை வணங்கும் திரு. மோடியின் ஆட்சியில் யோகாவை உலகமெல்லாம் கொண்டாடும் படி செய்தவர் வேகமான சாலைகளை உருவாக்க
வேகமெடுப்பது முரணாக உள்ளதே.
பாரத்மாலா - சாகர் மாலா திட்டங்கள்
:
இந்த திட்டங்கள்
அனைத்தும் சீனாவின் கட்டுமான பணிகள் அதன் போர் தளவாட்ங்கள் நம்மை சுற்றி வளைக்க முயற்சியை
தடுப்பத்ற்கு என்று தெரிகிறது. கூடங்குளம் அணு உலையும் அணு ஆயுதம் தயார் நிலை வைப்பதற்காகவே
என்றும் புரிகிறது. சீனாவைப் போல் நாம் கட்டுமானப் பணிகளில் அதி தீவிரமாக செயல் பட
வேண்டிய அவசியமும் தெரிகிறது. ஆனால் சீனாவின் மிகப் பெரிய பலவீனமாக் இருப்பது அவர்களின்
நசுக்கும் போக்கால் அன்னாட்டு மக்கள் மனம் வெதும்பி விரக்தியில் தான் வாழ்ந்து வருகிறார்கள். கம்யுனிசம் பேசிக் கொண்டே சந்தை பொருளாதாரத்தை பின்பற்றும்
சீன ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கும் ஆன்மீக நாட்டம் ,தேடல் அதிகரித்து
வருகிறது. இதற்கு கலைகளின் உதவியைதான் நாட
வேண்டும். மொழி வேறுபாட்டை நாம் இசை மூலமாகத்தான்
சீர் செய்ய வேண்டும். உலகத்தரமான நமது இரு இசைஞர்களை அவர்களும் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டுன்
இருப்பதால் போதி தருமர் போல் இசை அமைப்பாளர்கள் திரு. இளையராஜா மற்றும் திரு. ஏ.ஆர்.
ரகுமான் போன்றவர்களின் இசையால் நாம் சீனர்களை நமது நண்பர்களாக்கி கொள்ள வேண்டும். இசை வலுப்பெற நம்மிடம் இயற்கை வலுவாக இருக்க வேண்டும். அதற்கு
திருவண்ணாமலை, தருமபுரி, தருமசாலா போன்ற இயற்கை சாற் ஆன்மீக மையங்கள் இயற்கையோடு
மிகுந்த பசுமையாக இருத்தல் அவசியம்.
இன்று அதிவேக
சாலைகள் வேண்டும் அதி வேக கார்கள் வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்
கூட வருடத்தில் ஒரு விடுமுறையாவது காடுகள் மலைகள் போன்று இடங்களுக்கு சுற்றுலா சென்று
தான் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். இயற்கையாகவே மலைகளில் அமைதியான சூழ்நிலையில் வாழ்பவர்களை
கிழே வரச் செய்து நம்மை போல் ரேசன் கடை வாழக்கைக்கு தள்ளிவிடுவது என்ன நியாயம்
???? ஞானம் பெற்ற ஞானிகள் அனைவரும் மரத்தின் அடியில் பெற்றார்கள். சீனாவில் பழமொழியே உண்டு - பாரதம் ஒரே ஒரு போர்
வீரனை கூட அனுப்பாமல் நம்மை ஆட் கொண்ட நாடு என்று. இதனை உணர்ந்து தான் மெக்காலே சொன்னார் இந்தியாவின்
ஆன்மீக முதுகெலும்பை பிரித்தாள வேண்டும் என்று.
இன்றும் நாம் போடும் திட்டங்கள் மெக்காலேவின் இலக்கை நோக்கியே இட்டு செல்லும்.
அருட்ப்ரகாச
வள்ளலார் தெய்வமணிமாலையில் அருளியது போல்
:
" தரு
ஓங்கு சென்னையில் - தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டதுள் வளர் தலமோங்கு கந்தவேளே
" இந்த பாடல் விளங்க கூறுவது தரு (மரம்
) ஓங்கினால் தான் தருமம் ஓங்கும். தரு குறைந்தால்
தருமம் குறையும். அதனால் சாலை விரிவாக்கம் உருவாக்கம் என்று கூறிக் கொண்டு மரங்களையும் மலைகளையும் வெட்டினோமேயானால் கடையேழு
வள்ளல்களால் வளர்க்கப்பட்ட தருமபுரி என்ற உன்னத பூமி தன் தரும நிலையை மேலும் இழக்க நேரிடும். அரசாங்கமே குடியை ஊத்திக் கொடுக்கும் நிலையில் தான்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நிலகையகப்படுத்தலும் நஷ்ட ஈடும் :
யானைகளின்
காட்டிற்குள்ளே சாலையை போட்டுவிட்டு யானைகள் சாலையை கடக்கின்றன என்று கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரியில் அபத்தமாக செய்தி போடுவது போல் , திண்டிவனம் -திருவண்ணாமலை- செங்கம் - ஹோசூர்
சாலைகள் பல வருடங்களுக்கு முன்பே காப்புக் காடுகள் வழியில் பல மரங்களை வெட்டி சாலை
போட்டு இன்று அந்த சாலைகளையும் சரிவர போடாமல், ஒரு மரத்திற்கு நாலு மரங்கள் வைக்க சொல்லி நீதிமன்றமே ஆணையிட்டும் மரங்களே வைக்காத நெடுஞ்சாலை
துறையினர் வரப்போகும் தேசிய நெடுஞ்சாலையில் 6 இலட்சம் மரங்களுக்கு 24 இலட்சம் மரங்கள்
எப்படி வைக்கப் போகிறார்கள் ??? வைத்தாலும் எப்படி பராமரிப்பார்கள்?? பல நூறு வருடங்களாக
வளர்ந்த ஒரு மரத்திற்கு எப்படி ஒரு இளங்கன்று ஈடாக முடியும். இன்று தெருவில் மனிதர்கள்
போடும் உணவிற்காக வாகனங்களில் அடிபடும் குரங்குகள் அவர்களின் காப்புக் காட்டிற்குள்
சாலையை போட்டதாலேயே இந்த நிலைக்கு ஆளாகினர்.
விவசாயி ஈடுபாட்டுடன்
செய்து வரும் வேலையை விட்டு விரட்டிவிட்டுவிட்டு நாளையிலிருந்து நீ கூலிக்காரனாக தொழிற்சாலையில்
வேலை செய்ய வேண்டும் என்பது தனிமனித சுதந்திரத்தில் குறுக்கிடுவது இல்லையா ???
இன்னமும்
சென்னை நகரத்திற்கு வேகமாக வந்து சேர்ந்து என்ன சுகத்தை அனுபவிக்க போகிறார்கள் ?
645 சதுர கி.மீ பரப்பளவுள்ள சென்னை 80 இலட்சம் மக்கள் தொகைக்கே விழி பிதுங்கி கொண்டு
இருக்கிறது. 2015ல் வந்த வெள்ளத்தில் சென்னை யோக்யதை தெளிவாகியது. 6000 சதுர கி.மீ உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில்
வெறும் 25 இலட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர் வீரர்களுக்கு படியளந்த மாவட்டம்
தன் மக்களுக்கு அளக்காதா ??? விவசாய சார்ந்த தொழில்களை மாவட்டத்தில் உருவாக்கினாலே
போதுமானது. இங்கு இருக்கும் மலை குன்றுகளை
பசுமையாக்கியானால் தண்ணீர் மிகு மாவட்டமாகி விவசாயம் செழித்து சென்னையின் பளு குறைக்க
உதவும். இது போன்றே அனைத்து சுற்று மாவட்டங்களை பலமாக்கினால் சென்னையை நோய்களின் பிடியிலிருந்து
மீட்கலாம்.
நாளை விவசாயத்தை
விரும்பும் ஒருவர் முதல்வராகவோ பிரதமராகவோ வந்தால் அவர் தொழிற்சாலையிடம் நீங்கள் இந்த
இடத்தை காலி செய்து கொண்டு போய் விடுங்கள் நாங்கள் உங்கள் தொழிறசாலையின் மீது விவசாயம்
செய்ய போகிறோம் என்றால் விலகி போய்விடுவாரா ??? இது சாத்தியமா ??? அரசியல் பிரமுகரின்
வீட்டையோ, ஒரு சினிமா நடிகரின் வீட்டையோ, நாளையிலிருந்து நீங்கள் இருக்கும் வீட்டை
காலை செய்ய வேண்டும் நாங்கள் இங்கு விவசாயம் செய்ய போகிறோம் என்று போய் கேட்க முடியுமா
???விவசாயிடம் மட்டும் எப்படி அரசாங்கம் அவர்களின் விருப்பு வெறுப்பை அறியாமல் நேரடியாக
முடிவெடுக்க முடிகிறது.
அய்யா திரு. வசந்தன்
பெருமாள் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அனுப்பி விட்டு நாளை முதல் விவசாயம் செய்ய
வேண்டும் என்றால் செய்வாரா ? பேனா பிடித்த கை ஏர் பிடிக்குமா? நாற்காலியிலேயே உட்கார்ந்து
பழகிய முதுகு நாற்று நட வளையுமா ??? நீங்கள்
மட்டும் இன்றைய சோமாலியா போன்ற இயற்கை அழிக்கப்பட்ட பகுதியில் பிறந்திருந்தால் உங்கள்
பெற்றோர் உங்களுக்கு வசந்தன் பெருமாள் என்பதற்கு பதில் கசந்தன் பெருமாள் என்றே பெயர்
வைக்கும் என்ற நிலையிருந்திருக்கும். நீங்கள் பிறந்த போது வசந்தம் மிகு சுழ்நிலை இருந்ததனால்
தான் மகிழ்ச்சியுடன் இந்த பெயர் வைத்தனர். ஆனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு
வசந்தத்தை விட்டுச் செல்ல போகிறோமா ????
துக்ளக் எப்போதும்
மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து கட்டுரைகளை வெளியிடும் தரமான பத்திரிகை.
இதற்கு முன்பும் அய்யா திரு சோ அவர்கள்ஆகஸ்ட் 2016 ல் இயற்கை வேளாண்மை பற்றிய என்னுடயை
கட்டுரையை வெளியிட்டார்கள். அது போலவே எனது
இந்த கட்டுரையினை வெளியிட்டு அரசாங்கத்திற்கும் மக்களிற்கும் இயற்கை பாதுகாக்க வேண்டி
அவசியத்தையும் இது போல் இயற்கை சேதப்படுத்தும் திட்டங்களை மாற்றி மக்களுக்கும் மற்ற
எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காத நல்ல திட்டங்களை ஆதரிக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
அன்புடன்
ச. கிருஷ்ண
குமார்
இயற்கை வழி
விவசாயி
மற்றும்
பொறுப்புள்ள
குடிமக்கள் இயக்கம்
மேல்பாச்சார்
கிராமம்
திருவண்ணாமலை
மாவட்டம்.
கைபேசி
: 99 62 66 78 19
மின்னஞ்சல்
: skrikumar@yahoo.co.uk
No comments:
Post a Comment