அதனை இந்த விஜய தசமி அன்று ( 12-அக்டோபர்-2024) ஆர் எஸ் எஸ்ஸின் 100 வது ஆண்டு நிறைவு பெறுவதை ஓட்டி தமிழிலும் தருகிறோம்.
காந்தி இந்திய அரசியலில் நேரடியாக களத்தில் இறங்கிய அதே 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் ஆர் எஸ் எஸ் ம் தொடங்கப்பட்டது. ஆனால் சரியாக 100 ஆண்டுகள் கழித்து நாம் இந்த நிகழ்வை திரும்பி பார்க்கும் போது ஆர் எஸ் எஸ் என்கிற ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் இன்றும் களத்தில் இறங்கி தொண்டர்களுடன் பணியாற்றி வருகிறது. ஆனால் காந்தியின் ஆசிரமங்கள் இன்று அருங்காட்சியகங்களாக, நினைவு சின்னங்களாக, நூலகங்களாக ,கடந்த காலமாக காட்சி அளிக்கிறது.
காந்தியின் காந்தியம் ஒரு தனி மனிதனின் அடையாளமாக இன்று வரை பார்க்கப்படுகிறது. அவர் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இன்று அவரைப் போல் வாழ்பவர்களை காண கிடைப்பதில்லை.
இன்று எத்தனை காந்தி ஆசிரமங்கள் அதே கொள்கையுடன் வாழ்பவர்கள் உடன் இயங்கி வருகின்றன ?
இன்றும் சிலர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதன் படி செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் காந்தி வாழ்ந்த அளவிற்கு எளிமையாக அரை ஆடையுடன் வாழ முடியுமா ? வாழ்கிறார்களா ? என்ற கேள்வி நிற்கிறது.
இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவிலும் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியை அறிவார்கள் ஆனால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை துவக்கிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களை எத்தனை பேருக்கு தெரியும் ?
காந்தி தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கினார். அவரைப் போல் இன்னொருவர் வாழ முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பி விட்டு சென்று விட்டார் ஆனால் இன்றளவும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தொண்டர்கள் இந்தியாவின் மூலை முடுக்கு எங்கும் டாக்டர் ஜி உருவாக்கி கொடுத்த வழிமுறையில் தேச சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
"காந்தி ஏழ்மையில் வாழ என்ன செலவாகிறது என்பதை அறிவாரா ?" என்று காந்தியின் சமகாலத்தவரும் நீண்ட கால நண்பருமான கவிஞர் சரோஜினி நாயுடு வியந்திருக்கிறார். காந்தியின் எளிமையான வாழ்க்கைக்கு காங்கிரஸோ அல்லது வேறு ஒரு நிறுவனமோ அதற்கு ஈடு கட்ட செலவுகள் செய்தன என்று அவர் குறிப்பில் தெரிய வருகிறது.
காந்தியின் எளிமையான வாழ்க்கைக்கு அவரை ஆதரித்த நிறுவனங்களின் செலவு ஈடு செய்ய வேண்டி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் காந்தியை சுற்றி இருந்த பலர் காந்திக்கு மட்டுமே எளிமை என்று நம்பி அவரை அரை நிர்வாணமாக நடமாட வைத்து அவர் எளிமையை பிரகடனப்படுத்தினர்.
ஆர் எஸ் எஸ்ஸில் மட்டும் எப்படி உணவை குறைந்த செலவில் தயாரிக்க முடிகிறது? என்று காங்கிரஸால் ஏன் முடியவில்லை ? என்று காந்தியே வியந்துள்ளார். ஆர் எஸ் எஸ்ஸில் ஒவ்வொருவரும் சமையலுக்கு தேவையான சமைத்தல், சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் உட்பட அனைத்தையும் தன்னார்வ தொண்டர்கள் அவர்களே செய்து வருகிறார்கள்.
இது குறித்து காந்திஜிக்கும் ஆர் எஸ் எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் ஜிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை படித்தால் விளங்குகிறது. இதில் காந்திஜி டாக்டர் ஜியை ஏன் காங்கிரஸில் இருந்து விலகினீர்கள் ? சங்கத்தை ஏன் தொடங்கினீர்கள் ? என்று வினவி இருக்கிறார்கள். அதற்கு டாக்டர் ஜி - காங்கிரஸ்ஸில் சேவா தள தொண்டர்கள் என்பவர்கள் வெறும் நாற்காலிகள் எடுத்து போடவும் இடங்களை சுத்தபடுத்தவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் ஆனால் ஆர் எஸ் எஸ் சில் அனைவருமே தேசத்தை கட்டி காப்பவர்கள் அதற்காக அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கி வருகிறோம் என்று விளக்கி உள்ளார்கள்.
காந்திஜி தானே கழிவறைகளை சுத்தம் செய்து முன்னுதாரணமாக வாழ்ந்த்துள்ளார் ஆனால் அவரை சுற்றியிருந்த பலருக்கு அவருடன் இருக்கும் நேரத்தில் மட்டும் செய்யும் சேவையாக நினைத்துள்ளனர். ஆச்சார்ய வினோபா பாவே, ஜே சி குமாரப்பா , ராஜாஜி போன்ற சிலர் காந்தியை காட்டிலுமே அதிக காந்திய கொள்கைகளை கடைபிடித்தாலும் பலரிடமும் அந்த சேவை உணர்வை 100 ஆண்டுகள் கொண்டு செல்லக் கூடிய தன்னனலமற்ற தொண்டர் படையை உருவாக்கும் இயக்கத்தை அவர்களாலும் உருவாக்க முடியவில்லை.
காந்திஜிக்கும் டாக்டர்ஜிக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் லிங்க் கிழே வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸை கலைக்கும் முடிவு :
காந்திஜியின் சத்திய சோதனை முயற்சியில் அவர் பல உயர்ந்த கொள்கைகளை பின்பற்ற முயன்றுள்ளார், ஆனால் அவற்றை அவர் காலத்திற்கு பிறகு பலராலும் கடைபிடிக்க முடியுமா என்று கணிக்க தவறி விட்டார். அதனாலேயே தன்னை போல் சிந்தனை உள்ளவர்கள் மிக குறைவாகவே உள்ளனர் என்பதனை உணர்ந்து, காந்தி காங்கிரஸ் இந்திய விடுதலைக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இயக்கம் என்று அதனை 1947ல் விடுதலைக்கு பின் கலைக்கவும் விரும்பினார். பல சித்தாந்தங்களை கொண்ட பலரையும் காங்கிரஸ் என்ற ஒரு கொடையின் கீழ் இனி நடத்த முடியாது என்று தெளிவாக காந்தி உணர்ந்திருந்தார்.
விடுதலைக்கு பின் இந்தியா -டாக்டர் ஜியின் திட்டம் :
ஆனால் டாக்டர் ஹெட்கெவார் ஜி ஆரம்பித்த இயக்கம் விடுதலைக்கு பின் இந்தியா எப்படி வலிமையாக இருக்க வேண்டும், அதற்கு பொது மக்கள் எப்படி வலிமையான கொள்கைகளோடு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இயக்கத்தை எப்போதும் ஒரு தொண்டு நிறுவனமாக இயக்குவதற்கு வடிவமைத்துள்ளார். முக்கியமாக இந்தியா (பாரதம் ) இனி ஒரு நாட்டிற்கு அடிமையாக கூடாது என்பதற்காகவே இந்த மண்ணின் பாரம்பரியத்தை ஊட்டும் விதமாக பயிற்சிகளை வடிவமைத்து, செய்து காட்டி வழி காட்டி சென்றுள்ளார்.
சங்கத்தின் குரு யார் ?
அதனாலேயே அவர் தன்னை சங்கத்தின் குருவாக காட்டவில்லை. அர்பணிப்பு, தியாகத்தின் அடையாளமான காவி கொடியையே சங்கத்தின் குருவாக வழிபட செய்து சென்றுள்ளார். ஒவ்வொரு ஆர் எஸ் எஸ் தொண்டரும் அந்த கொடியையே வணங்க வேண்டும் அதனடியிலேயே தேச சேவைக்காக உறுதி ஏற்க வேண்டும் என்று வழிப் படுத்தியுள்ளார். அதனாலேயே விஜயதசமி ஆன இன்று சங்கம் 100 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து உள்ளது.
காந்திஜியை ஒவ்வொரு ரூபாயிலும் படம் பிடித்து போட்டாகி விட்டது ஆனாலும் அவர் கொள்கைகளை 100 % பின்பற்றுவோர் இன்று இல்லை. தன்னை முன்னிறுத்தாமல் பிரபலடுத்தி கொள்ள முயலாமல் செய்த டாக்டர் ஜியின் வழிமுறை 100 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது.
பாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை - ஆர் எஸ் எஸ் ஸே காரணம் ? :
இதே காலகட்டத்தில் விடுதலை அடைந்த பாகிஸ்தானின் நிலையை 2024 ல் ஒப்பிட்டால், பாகிஸ்தானிலும் ஜின்னா ஜி இருந்தார்கள், அவர்கள் நாட்டிற்கு ஒரு பச்சை கொடி தான், அந்த நாடு ஒரே ஒரு மதத்தை மட்டும் பின்பற்றுவதாக அறிவித்து கொண்ட நாடு, ஆனால் இன்று பாகிஸ்தான் மூன்றாக பிரிய கூடிய தருவாயில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி அனைத்து தேவைகளுக்கும் அமெரிக்காவையும், சீனாவையும், சவுதி அரேபியாவையும் நம்ப வேண்டிய நிலையில் உள்ளது. பாகிஸ்தானில் ஒரு ஆர் எஸ் எஸ் இல்லாததே அந்த நாடு இன்று பின் தங்கி உள்ளதற்கு காரணம்.
ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் சில பண்புகள் :
1. ஓவ்வொரு தொண்டரும் ( ஸ்வயம் சேவக் ) இந்த நாட்டிற்கு தான் தொண்டர் எந்த தலைவருக்கும் அல்ல.
2. பாரத தேசத்தில் எந்த பேரிடரிலும் அங்கு தன் சொந்த செலவில் சென்று சேவை செய்ய வேண்டும். இதற்கு எந்த வகையிலும் ஆர் எஸ் எஸ் இயக்கம் பஞ்சப்படி , பயணப்படியோ வழங்காது. இன்றைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு எதுவும் பணம் செலவு செய்யாமல் கூட்டம் கூட்ட முடியவில்லை. கடந்த 6ம் தேதி நடந்த சங்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய பொது நிகழ்ச்சியிலோ ஊர்வலத்திற்கோ தங்கள் சொந்த செலவில் சீருடை வாங்கி அணிந்து நிகழ்விடத்திற்கு வந்து கலந்து கொண்டனர்.
சூனாமி பேரழிவின் போது 2004ல் நாகப்பட்டினத்தில் இருந்த அழுகிய பிண குவியலகளை எடுத்து இறுதி சடங்குகள் செய்ய துப்புரவு பணியாளர்களே துணியாத போது ஆர் எஸ் எஸ் தொண்டர்களே அனைத்து சடலங்களுக்கும் இறுதி சடங்குகள் செய்தனர். ஆனால் இது எதற்கும் ஒரு போட்டோ கூட எடுத்து அந்த சேவைக்கு விளம்பரம் தேடவில்லை. சமீபத்தில் வயநாட்டில் நிலச் சரிவு பேரழிவின் போதும் "சங்கி"களே முன் நின்று பல்லாயிர கணக்கில் உதவிகள் செய்தனர்.
1965 பாகிஸ்தான் போரின் போது இந்திய இராணுவமே சங்கத்தின் உதவியை நாடிய தருணங்களும் இருக்கின்றன.
3. எந்த வித விளம்பரங்களும் இன்றி எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை செய்ய மட்டுமே ஆர் எஸ் எஸ், தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இதனை எந்த ஒரு அரசியல் கட்சியிலோ, தொண்டு நிறுவனங்களிடமோ, தனியார் துறையில் சம்பளம் வாங்கிக் கொன்டு வேலை செய்யும் ஊழியரிடம் கூட எதிர்பார்க்க முடியாது.
4. எந்த வித மத, ஜாதி, இன, மொழி உணர்வு சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் காண முடியாது. இங்கு உயர் பதவியில் இருப்பதனாலோ செல்வ செழிப்பின் படியோ எந்தவித பாகுபாடும் காட்டபடுவதில்லை. பல இடங்களில் மிக குறைந்த வசதிகளுடன் கூட சேவை செய்ய ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தயங்குவதில்லை
5. ஒவ்வொரு தொண்டருக்கும் உடல் -மன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. அவர்கள் என்றைக்கும் ஆரோக்கியமான எண்ணங்கள் உடனும் உடலுடனும் சேவை செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்.
6. ஒவ்வொரு சேவகர்களையும் அவரவர் திறனிற்கு கேற்ப பல்வேறு களப்பணியில் சங்கம் பயன்படுத்தி கொள்கிறது.
7. மிகப் பெரும்பான்மையான பணிகளில் பணம் வசூலிப்பதில்லை. அப்படியே உதவி செய்ய வருவோரிடமும் பொருளாகவோ பிற சேவைகளுக்கு நன்கொடையாளரே நேரடியாக பணம் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேரும் பணத்திற்கும் முறையான வரவு செலவு கணக்குகள் பராமரிக்கபடுகின்றது.
இந்தியாவில் வேறெந்த நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னார்வ தொண்டர்கள் ஆர் எஸ் எஸ் சிற்கு இருப்பதை போன்று இல்லை.
தீர்க்கதரிசி டாக்டர் ஹெட்கெவார் தொலை நோக்கு சிந்தனையுடன் அடுத்த அடுத்த தலைமுறைக்கு தொடர் ஓட்டமாக கோண்டு செல்ல வேண்டிய வழிமுறையை உண்டாக்கிவிட்டு சென்றுள்ளார். அவருக்கு பிறகு வந்த தலைமையும் மிகச் சிறப்பாக வழி நடத்தி இன்று திரு. மோகன் பகவத் வரை இயக்கத்தை வழி நடத்தி வருகின்றனர்.
பல தலைவர்களும் தோற்ற இடம் :
ஆனால் இந்த பண்பில் தான் காந்திஜி, இராஜாஜி, நேதாஜி என்ற பல முக்கிய தலைவர்களும் கோட்டை விட்டுள்ளனர். அதுவும் காந்திஜிக்கும் நேதாஜிக்கும் மிகப் பெரிய ஆதரவு இருந்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "இந்திய நேஷ்ணல் ஆர்மி" என்ற ஒரு படையையே நடத்தி ஆங்கிலேயரை ஓட ஓட விரட்ட மிக முக்கியமான காரணமாக அமைந்தார். இருப்பினும் அந்த ஆளுமை நீங்கிய பின் படிப்படியாக அவர்கள் நிறுவனங்கள் காணாமல் போகின அல்லது அவர்கள் ஏற்ற சித்தாந்தங்களை பின் வந்தவர்கள் பின்பற்றவில்லை. காந்திஜி, நேதாஜி டாக்டர் அம்பேத்கர் என்று பலரையும் ஆச்சரியபட வைத்தது ஆர் எஸ் எஸ் சின் கட்டமைப்பே. அவர்களால் மிக பெரிய உயரத்தை தொட முடிந்தது, ஆனால் அவர்களுக்கு பின்னால் வந்தவர்களால் அவர்கள் விட்டு சென்ற வெற்றிடத்தை இன்று வரை நிரப்ப முடியவில்லை. வசீகரமான ஒரு தலைமை போன பின் அந்த இடத்திற்கு வேறு யாரையும் தயார் படுத்தவில்லை.
இங்கு தான் டாக்டர் ஹெட்கெவார் பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளார். அவர் எங்குமே தன்னை முன்னிறுத்தவில்லை. பாரத மாதா வைதான் முன்னிறுத்தினார். தன் படங்களுக்கு பூ போட சொல்லவில்லை. ஒரு காவி கொடி அதன் கீழ் தேச சேவைக்காக ஒரு சபதம். இதுவே ஆர் எஸ் எஸ் சின் வெற்றியின் தாரக மந்திரம்.
சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி :
சீனாவில் நீண்ட நெடும் காலமாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சியின் அடிப்படை தத்துவமான பொதுவுடைமை என்ற தத்துவத்தில் இருந்து விலகி முதாலளித்துவ தனிவுடைமையில் சிக்கி இன்று இராணுவத்தின் இரும்பு பிடியினால் மட்டுமே ஒன்றாக இருக்கிறது. அங்கும் தன்னலமற்ற பொது சேவை ஆற்றக் கூடியவர்கள் அந்த கட்சியில் இன்று இல்லை. பெரும்பான்மையான மக்கள் சீனாவில் ஒருவித விரக்தியில் தங்கள் மனதில் உள்ள குமுறல்களை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆர் எஸ் எஸ் ஸின் வேக தடைகள் என்ன ?
ஒரு 100 ஆண்டுகளை கொண்டாடும் ஒரு இயக்கத்தின் சிறந்த பண்புகளை பாராட்டும் வேளையில் அந்த நிறுவனத்திலும் சில வேக தடைகளையும் குறிப்பிட வேண்டி உள்ளது.
இயற்கையை விட்டு விலகலாமா ?
நாகரீகத்தையும் பண்பாட்டையும் போற்றும் சங்கம், அந்த பாரம்பரீயம் உருவாக காரணமான இயற்கை வழி வாழ்வியலில், மலைகள் , நதிகள், மரங்கள் பராமரிப்பது பாரதத்தின் அடிப்படை தன்மை என்பதை மறந்து வருகிறது.
பெயர் அளவிற்கு "பர்யாவரன்", "வன விகாஸ்", "கிராம் விகாஸ்" என்ற பெயர்களில் அமைப்புகள் இருந்தாலும் இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் இயற்கை சுரண்டல்களை தடுக்க கூடிய ஆற்றல் சங்கத்திடம் இல்லை.
கிருஷ்ணனின் உபதேசத்தை ஏற்க மறுப்பதேன் ?
கிருஷ்ணன் கோவிலை காப்பாற்ற துடிக்கும் இயக்கம் அந்த கிருஷ்ண பரமாத்மாவே வணங்கச் சொன்ன மலைகளை காப்பாற்றுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை.கலாசாரத்திற்கும் நதிகளுக்கும் என்ன சம்பந்தம் ?
மலைகளில் அடர்ந்த வனம் இருந்தால் மட்டுமே ஆறுகள் உற்பத்தியாகும். நதிகள் ஓடினால் மட்டுமே நாகரீகம் வளரும். கலைகள் வளரும்.
பூமி வெப்பமான பின் எதை காப்பாற்ற போகிறோம் ? கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் கலைகளை காப்பாற்றுகிறேன் என்று இவை அனைத்திற்கும் ஆதாரமான மலைகளையும் மரங்களையும் ஆறுகளையும் அழித்த பின் வெப்பத்தில் எதை காப்பாற்ற போகிறோம் ?
மலைவாழ் மக்களின் பங்கு என்ன ?
அதற்கு மிக முக்கியமானது மலைகளை, வனங்களை பாதுகாப்பதே. அதனை காப்பாற்ற நினைப்பவர்களை அங்கு இயற்கையோடு ஒத்து வாழ்பவர்களை அங்கு இருந்து விரட்டி விட்டு நிலக்கரி எடுக்கிறேன் இரும்பை எடுக்கிறேன் என்று இயற்கை வளங்களை இழப்பது நமது பாரம்பரியமல்ல. மீண்டும் மலையில் வாழ நினைப்பவர்களுக்கு அதற்குரிய சூழலை, பயிற்சியை சங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மலை வாழ்வினத்தை சேர்ந்த ஒருவரை இந்திய குடியரசு தலைவராக ஆக்கிய சங்கத்தின் செயல் மிகவும் பாராட்டுகுரியது. அதற்கும் ஒரு படி மேலே மலையில் இயற்கை வழியில் வாழக் கூடிய ஒரு பெண்ணை தலைவராக்கி நமது நாட்டின் தலை நகரையும் "ரெய்சினா ஹில்"லில் இருந்து ஒரு மலையின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் ( பின் குறிப்பு : இதற்காகவே தலைநகர் அமைக்கிறேன் என்று மலை எங்கும் கட்டிடம் கட்டி மொட்டை ஆக்க கூடாது )ஆஸ்திரேலியா, ஆப்பரிக்கா இடையே நீரில் முழுகி இருப்பதாக தெரிகிறது.
நிலாவிற்கும், செவ்வாய்க்கும் விண்வெளியிலும் முன்னேறிய நாம், நமது பாரம்பரியத்தின் அடிநாதமான "முதல் மதுரை" யை தேடி முச்சங்கம் அமைத்து தமிழர் கண்டெடுத்த அறிவு சுரங்கத்தை மீட்டெடுக்க, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம், இந்திய அரசை முயற்சி செய்ய தூண்ட வேண்டும். அந்த முதலாம் மதுரை மீனாட்சியே பாரத மாதா.
Sakritease
சகிருட்டிஸ்
12 Oct 2024