Monday, May 2, 2022

Ramadan wishes

 


கடந்த 30 நாட்களாக பகலில் விரதமிருந்து எல்லாம் வல்ல இறைவனை சிந்தையில் நிறுத்தி ஐந்து வேளைகளில் தொழுது தம்மை இறைவனின் திருதொண்டராக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சில தடங்கல்களால் முழுமையான விரதம் இருக்க முடியாமல் போனவர்களுக்கும் இறை பேராற்றல் மீண்டும் மீண்டும் நல் வாய்ப்புகள் தர நல்வாழ்த்துக்கள். 

இந்த புனித வேளையில் இறை என்னும் பேராற்றலின் அற்புத படைப்புகளை எண்ணி வியந்து போற்றுவோம்.  வித விதமாக இயற்கையில் ஒவ்வொரு அங்கங்களையும் அவர் படைத்த நுணுக்கங்களையும் எண்ணும் போது இறைவன் மிகப் பெறியவன் என்ற எண்ணம் மேலோங்குகிறது. 

எல்லா வல்ல அல்லா தன்னை ஒவ்வொரு உயிரும், எறும்பு முதல் யானை வரை தன் படைபாற்றலை அன்பை வணங்க அவரவர் தன்மை கேற்ப வாய்பளித்துள்ளார்.

இதில் மனித இனம் மட்டுமே தன்னை போல் மட்டுமே மற்றவரும் இறைவனை வணங்க வேண்டும் என்று சட்டம் வகுக்கிறது. அதன்படி நடக்காதவருக்கு பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகிறது.  கருணை மிக்க இறைவன் ஒரே வகை மரங்களை படைக்கவில்லை. வேப்பமரங்கள் மட்டுமே இருக்கக் கூடிய ஒரு உலகத்தை நினைத்து பார்ப்போம். அங்கு தென்னை, மா, பலா, வாழை போன்ற மர வகைகளுக்கு வாய்ப்பு இல்லாது போனால் பல்வேறு சுவைகளை மனிதர்கள் உணராமலேயே போய்விடுவர். அது மனித குல பரிணாம வளர்ச்சியை பாதிக்கும்.

இறைமை என்ற பேராற்றலை போற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் பல்வேறு வழிகளை (மார்கங்களை) வழங்கியுள்ளார். மலையில் வாழ்பவர்கள், பள்ளத்தில் வாழ்பவர்கள், வயல்களில் வாழ்பவர்கள், பாலைவனத்தில் வாழ்பவர்கள், தீவுகளில் வாழ்பவர்கள் என்று பலதரப்பட்டவருக்கும் இறைவன் கொடுக்கும் அனுபவங்கள் வெவ்வேறு மாதிரியானவை. அதனால் அவரவர் முறையில் உருவம் வைத்தோ, உருவம் இல்லாமலோ, மலையையோ, ஆற்றையோ, மரத்தையோ அல்லது இது எதுவும் அற்ற வெறுமையையோ வணங்கியும் வெளிப்படையாக வணங்காமலும், மக்கள் பலதரப்பட்ட வகைகளில் வாழ்ந்து வருகிறோம்.

இதில் சிலர் மட்டும் நான் வணங்கும் முறையில் நீ வணங்காவிட்டால் உன்னை தாக்குவேன் அழிப்பேன் என்று களம் கண்டு பற்பல போர்களில் பல கோடி உயிர்களை அழித்துக் கொண்டே வாழ்வது அந்த இறை பேராற்றலை உணராமல் அந்த இறைவனின் படைப்பு திறமையை அவமானப்படுத்தும் செயலாகும்.

நான் வணங்கும் வேளையில் நான் வணங்கும் முறையில் நீ வணங்க வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்களும், நான் இறைவனை நம்பவேயில்லை அதனால் யாரும் அந்த நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்று தடுக்கும் நாத்திகர்களும் பல மனிதப் போர்களுக்கு பேரிழப்புகளுக்கு காரணமாகிவிடுகின்றனர்.


எடுத்துக்காட்டாக திரு. ஏ. ஆர். ரஹ்மான் உலகம் போற்றும் உன்னத இசைக் கலைஞர். அவர் முதன் முதலில் "சின்ன சின்ன ஆசை" என்ற பாடலுக்கு இசையமைத்து சினிமாத்துறையில் தன் தடம் படைத்தார். அதற்காக அந்த ஒரு டியூன் மட்டுமே தான் போடுவேன் மற்ற டியூன் போடமாட்டேன் என்று கூறியிருந்தால் அவரின் திரை இசை பயணம் 30 ஆண்டுகள் நீடித்திருக்க முடியாது. ஒரே ராகத்தில் இசையமைத்தால் கூட அதற்கு வேறொரு பாடகர் வேறொரு இசைகருவி என்று பல வித்தியாசங்களை அதில் சேர்த்து ஒரு புதுமையான பாடல் கேட்கும் உணர்வை அளிப்பதில் வல்லவர்.

2022ல் தோராயமாக இந்த பூமியில் 800 கோடி பேர் இருக்கிறோம் என்றால் இங்கு 800 கோடி மதங்கள் இருப்பதாக பொருள். ஏனென்றால் இங்கு ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித் தன்மையை தந்துள்ளவர் இறைவன், இறை, இயற்கை என்னும் பிரபஞ்ச பேராற்றல். மனிதனை தவிர பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு தனித் தன்மையை தந்துள்ள பேராற்றலை இறைவன், கடவுள் என்ற பற்பல பேர்களில் போற்றி மகிழ்கிறோம்.

"திருவாசகம்" என்ற செயற்கறிய செய்யுளில் இறைத் தன்மையை "ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்" என்று போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான். அதாவது இந்த அகன்ற பேரண்டத்தில் ஒவ்வொரு உயிரையும் ஆழ்ந்து கவனித்து ஒரு நுண்ணிய தன்மையை உட்புகுத்தி தனித்தன்மையுடன் படைத்திருக்கின்றார் இறைவன் என்கிறார்.

இந்த திருவாசகத்தை தன் மதம் மாற்றும் பணிக்காக படிக்க நேர்ந்த திரு.ஜி.யு.போப் அவர்கள் அதன் உள்ளர்த்தத்தையும் அதன் அகண்ட பிரபஞ்சத்தையும் விவரித்த விஞ்ஞானத்தையும் படித்து வியந்து அந்த திரு நூலை பல மொழிகளில் மொழி பெயர்த்தார். அவரை மதம் மாற்றும் பணியில் அமர்த்தியவர்களுக்கு அவரின் செயல் கடும் கோபம் கொள்ளச் செய்த்து. அவரின் மீது வழக்கும் தொடுத்தார்கள். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி அவரின் மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் முழுமையாக படித்த பின் "திருவாசகத்தை வாசித்த பின்பும் இவர் இன்னும் சைவ மதத்திற்கு மாறாமல் கிருத்துவராக இருப்பதே பேராச்சரியம்" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். 


நோன்பு நூற்று மனமெங்கும் மேன்மையான எண்ணங்களே மேலோங்கும் இந்த தருணத்தில் இறைவன் மிகப் பெரியவன், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று நம்பும் இறை அன்பர்கள், இத்தகைய மாபெரும் சக்தி படைத்த இறைவன் பலக் காரணங்களுக்காகத்தான் பல உயிர்களை படைத்துள்ளான். பல மதங்கள் தேவை இல்லை என்றால் அந்த மாபெரும் சக்தி அதனை படைக்கவே போவதில்லையே.  பூமியை போல பல ஆய்வகங்களை அந்த பிரபஞ்ச பேராற்றல் படைத்துள்ளது. நமது சூரியக் குடும்பத்தை போல் இன்னும் பல சூரிய குடும்பங்கள் உள்ளன.  எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகிறோமா அல்லது வெறுக்கிறோமா என்பதே நமக்கு இறைவன் அளித்திருக்கும் பொதுத் தேர்வு.

எல்லா உயிர்களிடத்தும் அல்லாவின் படைப்பு திறனை போற்றுவோம். சிலர் அந்த அந்த உயிர்கள் குடியிருக்கும் ஆலயங்களான உருவத்தையும் சேர்த்தே வணங்குவர். பாலைவனத்தில் வளரக்கூடிய மரங்கள் பசுமையான மலைகளில் வளராது என்ற இயற்கையின் கோட்பாட்டை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.  படைக்கும் தொழிலையும், காக்கும் தொழிலையும், அதனையும் அழிக்கும் தொழிலையும் இறைவனிடம் விட்டு விட்டு நாம்  இயற்கையுடன் " ஆதலினால் காதல் செய்வோம் மானிடரே" என்ற மகாகவி பாரதியின் கூற்றின் படி இயற்கை வாழ்வியலை நோக்கி நம் பயணத்தை மேற்கொள்வோம். 

சகிருட்டிஸ்
sakritease
3 May 2022


2 comments:

Translate

Contact Form

Name

Email *

Message *