Search This SAKRITEASE Blog

Monday, March 15, 2021

50 years of DMK- ADMK alliance

 

50  வருட கழக கூட்டணி

50 years of DMK- ADMK alliance


2021 மீண்டும் ஒரு தேர்தல். எந்த கூட்டணி வெல்லப் போகிறது என்பது பல கோடி ரூபாய்களுக்கான கேள்வி ??? ஆனால் யதார்த்த நிலை இரண்டு கழகங்களின் கூட்டணி 50 வது ஆண்டை பொன் விழாவை தமிழகத்தில் இந்த பொது தேர்தலில் கொண்டாட போகிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? 1971ல் திமுக இரண்டாக பிரிந்ததே கழகங்களின் மொத்த பிடியில் தமிழ்நாட்டை கொண்டு வரவே.  ஏனென்றால் அரசியல் என்பது ஒரு மிகப் பெரிய பண வியாபாரிகளின் சதுரங்கம், பதவி,  அதிகாரங்களுடன் கிடைக்கக் கூடிய வருமானம்.

தமிழ்நாட்டில் எல்லா பொதுமக்களுக்கும் நன்றாக தெரிந்த விஷயம் – எந்த கழகம் ஆட்சியிலிருந்தாலும் சாராயம் மாற்று கட்சிகாரரின் கம்பெனியிலிருந்தும் வாங்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.  இது எப்படி சாத்தியம் ? இப்படி பழி சண்டை போடுகிறவர்களுக்குள் கூட்டணியா என்று ஆச்சரியப்படுகிறீர்களா ? இதனை பல இடங்களில் திரு. கருணாநிதியும் திரு. எம்.ஜி. இராமசந்திரனும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.



இந்த தேர்தலிலும் ஒரு காட்சி வருகிறது கட்சியின் முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதியில் மாற்று கட்சியினர் பலவீனமான வேட்பாளர்களையே நிறுத்திக் கொள்வர். திரு. அர்விந்த் கேஜ்ரிவால் வாராணாசியில் திரு. மோடியை எதிர்த்து போட்டியிட்டது போல் தமிழ்நாட்டில் பெருந்தலைகள் நேருக்கு நேர் ஒரே தொகுதியில் மோதுவதில்லை. திரு. உதயநிதி ஸ்டாலின் நிற்கும் தொகுதியான சேப்பாக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க வில் சேர்ந்த நடிகை திருமதி. குஷ்பு போட்டியிடுவதற்காக அலுவலகம் கூட திறந்து விட்டார். ஆனால் திமுகவின் எதிர்காலமான திரு. உதயநிதிக்காக அதிமுக தொகுதியை விட்டு கொடுத்துவிட்டு அதிமுக முக்கியஸ்தர்களுக்காக அவர்களின் தொகுதியில் பலவீனமான பிரமுகர்களை திமுகவும் நிறுத்துகின்றன.



இந்த மறைமுக உறவு கடந்த 50 வருடங்ககள் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் மொத்தமாக தேயவைக்க பயன்பட்டுத்துள்ளது. இந்த மறைமுக கூட்டணியை திரு. கருணாநிதியும் திரு. ஆர். எம். வீரப்பனும் ஒரே மேடையில் முன்பே உறுதிப்படுத்தி உள்ளனர்.


இரண்டு கழகங்களுக்கும் அவர்கள் கொடியில் உள்ளது போல் ஒரு சின்ன வெள்ளை கோடு தான் வித்தியாசம். பெருந்தலைவர் திரு. காமராஜர் கூறியது போல் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்.



மொத்தமாக தமிழகம் ரூபாய் ஐந்து லட்சம் கோடி கடனை 50 வருடங்களாக சேர்த்தது தான் கழக அர்சுகளின் சாதனை.  இரண்டு கட்சிகளும் செயலாற்றும் முறையும் ஒரே பாணியில் இருவரும் மாறி மாறி அடுத்த கட்சியை ஊழலில் ஈடுபடுபவர்கள் என்று கைக்காட்டி திசை திருப்பி விட்டு விட்டு வெறும் அடியாள் பலம், கட்டப் பஞ்சாயத்து, சட்டத்துக்கு புறம்பான தொழில்கள், சாராய தொழிற்சாலைகள், கல்வி வியாபாரம் அனைத்து செயல்களிலும் இலஞ்சம் , முக்கியமாக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் இலஞ்சத்தில் பங்களித்து இலஞ்சம் ஊழல் செய்வது சமூகத்தில் இயல்பானது, அன்றாட வாழக்கையில் இலஞ்சம் தவறில்லை என்ற மனநிலையை உருவாக்கி தமிழக மக்கள் ஒரு மந்த நிலையில் அடிமை போல் இரு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றனர்.



இந்த சூழலில் 2006ல் மாற்றம் கொண்டு வர திரு. விஜயகாந்த் களமிறங்கினார், ஆனால் அவரால் குடும்ப கட்சியை தாண்டி பல வெளி திறமையாளர்களை ஈர்க்கமுடியாமல் உடல் நலமும் ஒத்துழைக்காமல் அவர் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது.



2021ல் நடிகர் திரு. ரஜினிகாந்த வருவார் , ஆன்மீக அரசியல் என்ற பெயரிலாவது ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார் என்று இரு கட்சிகளை வெறுக்கும் பலரும் எதிர்பார்த்து இருந்த போது, அவர் “மூன்று முடிச்சு” திரைப்படத்தில் செய்தது போல் திரு. கமல ஹாசனை குட்டையில் தள்ளிவிட்டு விட்டு அவர் கரை ஒதுங்கி கொண்டுவிட்டார். பலமான பரட்டையை எதிர்பார்த்த மக்கள் சப்பாணியாவது கிடைத்தாரே என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.


சாதாரணமாகவே தெளிவாக குழப்பும்
பரமக்குடிக்காரர் தெளிவாக தென் கோவையை தேர்ந்தெடுத்துள்ளது நல்ல துவக்கம் தான். மேற்கில் மையம் கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லா ஆறுகளும் கிழக்கு நோக்கி பாய்கின்றது. கோவையிலிருந்து மய்ய நாயகன் கிழக்கு கடற்கரையோரம் சென்னையில் கரையேறுவார் என்று எதிர்பார்க்கிறார்.



1967ல் ஒரு வைணவ ஞானியார், திரு . இராஜகோபாலசாரியார் (இராஜாஜி ) யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து காங்கிரஸை விரட்ட புறப்பட்டதால் வந்த வினை தமிழ்நாடு ஊழலிலே மக்களின் தார்மீக வளர்ச்சியிலே மிகவும் பின் தங்கி வருகிறது.  




மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு வேலை நடப்பதற்கும் ஒரு சிபாரிசு, சம்பளத்தை தாண்டிய கிம்பளம் தப்பில்லை என்ற மனோபாவம் தமிழ்நாட்டில் ஆழமாக வேறூன்றிவிட்டது. இலவச மோகம் தலை விரித்தாடுகிறது. இரு கழகங்களும் ஐந்து வருடத்திற்கு ஒரு ஓட்டு போடும் இயந்திரமாக வெறும் ஜட பொருளாக மக்களை மட்டமாக எடை போட்டு மலினமாக இலவசம் இலவசம் என்று மக்களின் வரிப்பணத்திலே மக்களுக்கே கடன் சுமையை ஏற்றிவிட்டு அரசியல்வாதிகள் நமது மாநிலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி வருகின்றனர்.






இரண்டு கழகங்களும் எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் இலவச கவர்ச்சி அரசியல் செய்துக் கொண்டு தமிழகத்தின் மக்களை தரத்தை மற்ற மாநில மக்கள் மற்ற நாடுகளின் கேலி பொருளாக்கிவிட்டு மக்களையும் அரசியல்வாதிகளின் கூட்டு களவாணி ஆக்கியுள்ளனர். சட்டப் பேரவைக்கு பண பலம் ஆள் பலம் சட்ட புறம்பாக சொத்து சேர்பவர்கள் மட்டுமே அரசியல் செய்து வர முடியும் என்ற நிலையில் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.



யார் இந்த நிலையை மாற்ற முடியும் ? இன்று தமிழகத்தை நல் வழிப்படுத்த முடியும் ??? என்ற ஏக்கமான கேள்விகள் பல மக்களிடையே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இரண்டு கழகங்களிலும் உள்ள வியாபாரிகள் வெளியில் கட்சி ரீதியாக சண்டையிடுவது போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர்களிடையே அரசாங்க சொத்தை எப்படி தனியார் சொத்தாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவான உடன்பாடு உள்ளது. தொழில் உடன்பாடு செய்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப சண்டைக் காட்சிகளும் வசன நாடக காட்சிகளும் அரங்கேறுகின்றன.



அதனால் தமிழ்நாட்டில் எப்பவும் எடுபடற ஃபார்முலா சினிமா நடிகர்களை நம்புவது தான். மக்களுக்கு குறைந்தபட்சம் இவர்கள் திரையிலாவது நல்லவராக நடிக்கவாவது செய்கிறார்களே என்கிற அல்ப சந்தோசம் தான்.



இந்த 2021 தேர்தல் நமக்கு மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே,  மிக குறைந்த நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது.

சப்பாணிய விட்டா இப்ப மயிலுக்கு வேற வாய்ப்பேயில்லை. இந்த பிறவி வைணவர் போலி நாத்திகம் பேசி மத அரசியல் செய்தாலும் மைனாரிட்டி மெஜாரிட்டி அரசியல் செய்தாலும் அவர் “விஸ்வரூபம்” காட்டின மாதிரி அவர் உள்ளே ஒருவருக்கு ஆதரவு வெளியே ஒன்று செய்ய போகிறார் என்று நம்புவோம்.



கமல் ஆட்சிக்கு வரணும் சொல்லலை, வந்தா கழகங்கள் கிட்டயிருந்து நமக்கு விடுதலை கிடைக்குமேனு சொல்றேன். இவரும் இன்னொரு கொள்ளிக் கட்டைதான் நிருபித்து கழகங்களை போல் இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தமாட்டார்னு நிச்சயம் நம்பலாம். ஏன்னா அவர் ஒரே மாதிரி வேஷம் ஒரே மாதிரி மனிதர்கள் எல்லாம் அவருக்கு சீக்கிரம் சலிச்சுரும்னு,  அவர் வாழ்க்கையில அவரே வாழ்ந்து காட்டியிருக்கார்.  அவர இந்திரன் - சந்திரன் சொல்ல முடியாது தான், அவர் தெனாலியாவே ஆட்சி நடத்தினாலும் நிச்சயம் கழகங்களை விட "பெட்டரா" செய்ய வாய்ப்பிருக்கு



இந்த கொள்ளை இருட்டில இப்போதைக்கு டார்ச் அடிச்சு முன்னேறுவோம் கூடிய சீக்கிரம் அகன்ற பேரொளி நம்மை வழிக் காட்டுவோம்னு நம்புவோம்ங்க. நம்பிக்கை தான் வாழக்கை.

 


சகிருட்டிஸ்

 

 

 

 

 

 

 

2 comments:

Translate

Contact Form

Name

Email *

Message *